வீட்டுவசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரித்து ஜூலைக்குள் முடிக்குமாறு அதே நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டு மனையை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த காவல் துறை அதிகாரி கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக அப்போதைய வீட்டுவசதி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது கடந்த 2012-ல் அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்து கடந்த 2023 மார்ச்சில் உத்தரவிட்டது.
இதை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். விசாரணை முடிந்த நிலையில், அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:-
சென்னை கே.கே.நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ரூ.1,180 வாடகையில் குடியிருந்த காவல் துறை அதிகாரி கணேசன், உண்மையை மறைத்து, அதிக வாடகையில் குடியிருப்பதாக கூறி, முகப்பேர் ஏரி திட்டத்தில் வீட்டுவசதி வாரிய மனை ஒதுக்குமாறு, 2008 மார்ச் 6-ம் தேதி மனு அளித்துள்ளார். அதை மின்னல் வேகத்தில் பரிசீலித்த அதிகாரிகளும், அப்போதைய வீட்டுவசதி துறை அமைச்சர் பெரியசாமியும் கணேசனுக்கு மனை ஒதுக்கி 2008 மார்ச் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளனர்.
பின்னர், கவிதா என்பவருடன் சேர்ந்து கணேசன் அந்த மனையை வேறொரு பெண்ணுக்கு சட்ட விரோதமாக விற்றுள்ளார். இதனால், கணேசன், கவிதா, பெரியசாமி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறையினர் 2012-ல் வழக்குபதிவு செய்தனர். சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்குபின்னர் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
தன்னை விடுவிக்குமாறு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்த பெரியசாமி, கடந்த 2021 மே மாதம் அமைச்சரானதும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் 2-வது முறை மனு தாக்கல் செய்தார். ‘‘எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் முன்பு ஆளுநரிடம் முன் அனுமதி பெறுவதற்கு பதிலாக, பேரவை தலைவரிடம் அனுமதி பெற்றது தவறு’’ என்று கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து, குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்ட பிறகு, பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச்சில் உத்தரவிட்டது சட்டவிரோதமானது. அந்த உத்தரவை ரத்து செய்கிறேன்.
2012-ல் அவர் அமைச்சர் அல்ல. எம்எல்ஏ மட்டுமே. அதனால், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய பேரவை தலைவர் அனுமதி அளித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை. தவிர, 2 முறை விடுவிப்பு மனு தாக்கல் செய்து விசாரணையை முடக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றினால், நீதி பரிபாலனம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குலைந்துவிடும். அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்கு என்பதே கேலிக்கூத்து என மக்கள் நினைக்க இடம் தர கூடாது. எனவே, இந்த வழக்கை எம்.பி.,எம்எல்ஏ நீதிமன்றமே தினந்தோறும் என்ற அடிப்படையில் மீண்டும் விசாரித்து, ஜூலைக்குள் முடிக்க வேண்டும்.குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் மார்ச் 28-ல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, தலா ரூ.1 லட்சத்துக்கு சொந்த பிணையும், அதே தொகைக்கான இருநபர் உத்தரவாதமும் அளித்து ஜாமீன் பெறலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.