சென்னையில் விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு!

முன்னாள் அதிமுக எம்எல்ஏ ரவிக்குமார், சென்னையில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி நிர்மலா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (65). 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். இவரது மகள் ரவீனா, செங்கல்பட்டில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி மருத்துவம் பயின்று வருகிறார். இதனிடையே, வார விடுமுறைக்காக வழக்கம் போல ரவீனா கடந்த சனிக்கிழமை பொன்னேரியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று (திங்கள்கிழமை) தனது மகளை மீண்டும் கல்லூரியில் விடுவதற்காக தனது காரில் அழைத்துச் சென்றிருக்கிறார் ரவிக்குமார். அவருடன் அவரது மனைவி நிர்மலாவும் உடன் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, மகளை கல்லூரியில் விட்டுவிட்டு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் சீமாவரம் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக எம்எல்ஏவின் கார் மோதியது.

இதில் ரவிக்குமாரும், மனைவி நிர்மலாவும் படுகாயமடைந்து உயிருக்கு போாடிக் கொண்டிருந்தவர்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர், ரவிக்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, படுகாயமடைந்துள்ள மனைவி நிர்மலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் ஓட்டுநர் விடுப்பில் இருந்தததால் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் காரை இயக்கியதாக தெரிகிறது.