கேட்டுச் சொல்கிறேன்

கலெக்டர் தேர்வில் இளைஞன் ஒருவன் தேர்ச்சி பெற்றிருப்பதைப் பணக்காரர் ஒருவர் அறிந்தார். பத்து வேலைக்காரர்களை அனுப்பி சொகுசுக் காரில் அந்த இளைஞனைத் தன் மாளிகைக்கு வரவழைத்தார்.

அரண்மனை போன்ற தன் மாளிகையைப் பெருமையுடன் அவனுக்குச் சுற்றிக் காட்டினார். அவருடன் நண்பர்களும் இருந்தனர்.

இளைஞனே! உன்னைப் பார்க்கும் போது எனக்குப் பெருமையாக உள்ளது. இந்தப் பகுதியிலேயே பெரிய பணக்காரன் நான். எனக்கு இருப்பது ஒரே மகள். அவள் அவ்வளவு அழகாக இருக்க மாட்டாள். அவளை உனக்கு திருமணம் செய்து வைத்து என் மருமகனாக்கிக் கொள்ள விரும்புகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார் அவர்.

மகிழ்ச்சியுடன் அவரை வணங்கிய அவன், ஏழையும் எளியவனுமான எனக்கு இவ்வளவு பெரிய நல்வாய்ப்பா? பேரும் புகழும் வாய்ந்த உங்கள் பரம்பரையில் பெண் எடுக்க நான் தவம் செய்திருக்க வேண்டும். என் வீட்டிற்குச் செல்ல அனுமதி தாருங்கள். இந்தத் திருமணத்திற்கு என் மனைவியிடம் ஒப்புதல் வாங்கி வந்து விடுகிறேன், என்றான்.