‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை பார்க்க சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினர்: விஷால்

‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் இந்தி வெர்ஷனை பார்க்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செயப்பட்டு 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் இந்தி வெர்ஷனை பார்க்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:-

வெள்ளித்திரையில் லஞ்சம் குறித்து காட்டுவது நல்லது. ஆனால், அது வாழ்க்கையில் நடப்பதை ஜீரணிக்க முடியவில்லை. மும்பை சென்சார் போர்டுக்கு ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் இந்தி வெர்ஷனுக்காக ரூ. 6.5 லட்சம் லஞ்சமாக வழங்கியுள்ளேன். இந்த பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்தோம். படத்தை திரையிடுவதற்கு ரூ.3 லட்சமும், சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் கொடுத்தோம். எனது சினிமா வாழ்க்கையில் இந்த நிலையை சந்தித்ததில்லை. இன்று திரைப்படம் வெளியானதில் இருந்து சம்பந்தப்பட்ட இடைத்தரகர் மேனகாவிற்கு பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை” என்று கூறினார்.

மேலும், இனிவரும் காலங்களில் எந்த தயாரிப்பாளருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை மகராஷ்டிரா முதல் மந்திரி மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பணம் கொடுத்த விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் விஷாலின் இந்தப் புகாருக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்சார் போர்டு ஊழல் விவகாரத்தை நடிகர் விஷால் முன்வைத்தது மிகவும் துரதுர்ஷ்டவசமானது. அரசாங்கம் ஊழலை சற்றும் பொறுத்துக் கொள்ளாது. இதில் யாரேனும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து விசாரிக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இன்றே மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார். jsfilms.inb@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் சென்சார் வாரியத்தால் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் அதைப் பற்றிய தகவலை வழங்குவதன் மூலம், அமைச்சகத்துடன் ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.