‘பருத்திவீரன்’ பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா!

’பருத்திவீரன்’ பட சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது கருத்துக்கு திரைத்துறையில் இருந்து பரவலாக எதிர்ப்பலைகள் கிளம்பிய நிலையில் ஞானவேல்ராஜா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பருத்திவீரன் பட சர்ச்சை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதைப் பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் நான் அவரைக் குறிப்பிடுவேன். ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன். அவர் சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்குப் பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவரைப் புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ‘பருத்திவீரன்’ படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக தன்னுடைய தரப்பு விளக்கத்தை அமீர் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.