பதவி சுகத்திற்காக பாஜகவுடன் உறவாடிய திமுக: எடப்பாடிபழனிசாமி!

கடந்த காலத்தில் பதவி சுகத்திற்காக பாஜகவுடன் திமுக உறவாடியது என்றும், எப்போதுமே சிறுபான்மையின மக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அதிமுக பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கோவையில் நேற்று ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் மாநாடு மற்றும் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறுபான்மையினர் காவலர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பேசிய வேலுமணி, “சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக இருக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமையும். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பதவி சுகம் வேண்டும் என்றால் கொள்கையை காற்றில் பறக்க விடுவது தான் திமுக தலைவர்கள். கடந்த காலத்தில் பாஜகவுடன் திமுக ஒட்டி உறவாடி பதவி சுகத்தை அனுபவித்ததை மக்கள் மறந்துவிடுவார்கள் என நினைக்க வேண்டாம். அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் நிலைமை அரசியலில் அதிகரித்துவிட்டது.. அதிமுக என்பது ஜாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மக்களையும் சமமாக.. உண்மையாக மதிக்க கூடிய இயக்கம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதம், அவர்களுடைய மதம் அவர்களுக்கு புனிதமானது. இது ஒரு ஜனநாயக நாடு, இந்த பெரிய ஜனநாயக நாட்டில் அவரவரர் மதத்தை சார்ந்தவர்கள் அவரவர்கள் கடவுளை வணங்குவது அவர்களுடைய சுதந்திரம். இதை தான் அதிமுக தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அதிமுகவுக்கு சாதி மதம் இல்லை, ஆண் ஜாதி, பெண் ஜாதி மட்டுமே உள்ளது. இளைஞர்களை அதிகம் கொண்ட கட்சி அதிமுக தான்.

இளைஞர்கள் அதிமுகள்ள கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும். திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகளை அளித்தது. இப்போது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதாகவும் சொல்கிறார்கள். திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் பஸ்சில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் இப்போது அப்படியா இருக்கிறது. இப்போது பேருந்தின் முன்னும் பின்னும் பிங்க் கலர் அடித்து வைத்துவிட்டு, அதில் ஏறினால் மட்டுமே மகளிருக்கு இலவச பயணம் என்று சொல்கிறார்கள். எப்படி ஏமாற்றுகிறார்கள் பாருங்க. அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று சொல்லிவிட்டு தற்போது குறிப்பிட்ட பஸ்சில் மட்டும் தான் கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியும் என்று சொல்கின்றனர். இது குறித்து சட்டசபையில் கேட்ட போது எங்கே அப்படி இருக்கிறது. எனக்கு காட்டுங்கள் என்று சாக்கு போக்கு கூறுகிறார். சட்டசபையில் எல்லாம் பதிவாகி தான் உள்ளது.

இதேபோல் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்றும், காய்ச்சல் சிறப்பு முகாம்களை நடத்துங்கள் என்று அமைச்சரிடம் சொன்னால் அவர் எனக்கு பட்டப்பெயர் வைக்கிறார். இப்போது அரசு ஆஸ்பத்திரிக்கு கையோடு போனால் கை இல்லாமலும், காலோடு போனால் கால் இல்லாமலும் தான் திருப்பி அனுப்புகின்றனர். ஆனால் அதிமுக ஆட்சியில் இப்படியா இருந்தது.. கை இல்லாதவர்களுக்கு கை பொறுத்தப்பட்டது. கால் இல்லாதவர்களுக்கு கால் பொறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்தது. தற்போது மக்கள் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கே பயப்படுகின்றனர். நிறைய அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்துகளே இல்லை. முறையான சிகிச்சைகளும் இல்லை.

கச்சத்தீவை வாரி வழங்கியதன் காரணமாக அங்குள்ள அந்தோணியார் ஆலயத்துக்கு செல்ல கிறிஸ்தவர்கள் இலங்கையிடம் கையேந்தி நிற்க்கின்ற நிலை இருக்கிறது. ஆனால் எப்போதுமே சிறுபான்மையின மக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அதிமுக பாதுகாப்பு அரணாக இருக்கும். இந்த மாநாட்டில் நீங்கள் விடுத்த கல்லறை தோட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் கண்டிப்பாக அதிமுக ஆட்சி வந்ததும் நிறைவேற்றப்படும். இப்போது நீங்கள் திமுகவின் தந்திரத்தை புரிந்துகொண்டிருப்பீர்கள்.

ஒரு விவசாயிக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் வெறும் தந்திரசாலி, தீயவன். இளைய மகன் மிகவும் அப்பாவி, நல்லவன். ஒவ்வொரு நாள் காலையிலும் தந்தை தன் இரு மகன்களையும் அழைத்து வயலுக்கு சென்று விவசாயக வேலைகளை செய்து வருமாறு அனுப்பி வைப்பது வழக்கம். மகன்களை அனுப்பி வைத்த பிறகு தந்தை நெல் மண்டியை கவனிக்க சென்று விடுவார். அப்பாவியான இளைய மகனோ தந்தை கூறியபடியே வயலுக்கு சென்று கடினமாக உழைத்து வேலைகளை முடித்துவிட்டு மாலை நேரத்தில் குளித்துவிட்டு வீடு திரும்புவார். ஆனால் மூத்த மகன் தந்திரசாலியோ தன் தம்பியிடம் எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் என் வேலையையும் சேர்த்து நீயே பார்த்துவிடு என்று அன்பாய் கூறுவது போல் ஏமாற்றி விட்டு நண்பர்களுடன் சேர்ந்து தீய செயலில் ஈடுபடுவார்.

மாலை நேரம் ஆனதும் பகல் முழுவதும் வேலை பார்த்தது போல தந்தையை நம்ப வைப்பதற்காக சேறு சகதியினை உடல் முழுவதும் பூசிவிட்டு வீடு திரும்புவார். இதை தினசரி கவனிக்கும் தந்தை மூத்த மகன் தான் கஷ்டப்பட்டு வேலை செய்து குடும்பத்திற்காக உழைக்கிறான் என்று நம்பி வந்தார். இதேபோல் இளைய மகன் நாம் சொல்வதை கேட்காமல் குடும்ப முன்னேற்றத்திற்கு எதிராக இருக்கிறான் என்று நம்பினார். இதனால் பண்டிகை நாட்களில் மூத்த மகனுக்கே பணத்தை வாரி வழங்குவார். இளைய மகனுக்கு குறைவாக தான் கொடுப்பார். ஆனால் இளைய மகன் அப்பா மீது கோபப்படாமல் பொறுமையாக பாசத்தோடு நடந்து வந்தான். என்றாவது ஒரு நாள் அப்பாவுக்கு உண்மை தெரியவரும் என்று அவன் வேலையை தொடர்ந்து செய்து வந்தான். இந்த நிலையில் ஒருநாள் வயலில் வேலை பார்த்த சமயத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இளைய மகனால் வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

ஒரு சில மாதங்கள் வயலுக்கு சென்று வேலை பார்க்க முடியவில்லை. இதனால் வயலில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், உரம் போடுவது, தண்ணீர் பாய்ப்பது போன்ற அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டன. இதனால் மூத்த மகன் வயலில் வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டது. எனவே மூத்த மகன் வயலுக்கு சென்று அன்றாடம் உழைக்கு நிலை ஏற்பட்டது. ஆனால் மூத்த மகனுக்கு இதுவரை வயலுக்கு சென்று விவசாய பணிகளை மெற்கொண்ட அனுபவம் இல்லை. அனுபவம் இல்லாததால் அந்த பருவத்தில் விளைச்சல் குறைந்துவிட்டது. அப்போதுதான் இளைய மகனின் உண்மையான உழைப்பும் மூத்த மகன் சோம்பேறியாக தன்னை ஏமாற்றி வந்ததும் உண்மை தந்தைக்கு புரிந்தது. உண்மை புரிந்த உடன் இளைய மகன் மீது அதிக பாசத்தை பொழிந்தார் தந்தை. அத்துடன் மூத்த மகனுக்கு அறிவுரைகள் வழங்கி திருத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.

இன்றைய உலகத்தில் பெரும்பாலானோர் இப்படித்தான் உள்ளனர். அரசியலிலும் இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது. ஒருவர் உழைப்பால் மற்றொருவர் வாழ்வதும், அடுத்தவர் முதுகில் ஏறி சவாரி செய்யும் நிலமையும் அதிகரித்து விட்டது. தமிழகத்திற்கு நல்லது செய்வோம்.. உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.