சொத்துக்குவிப்பு வழக்க்கில் வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக தன் மனைவி விசாலட்சுமியுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆஜரானார்.

பொன்முடி மற்றும் அவர் மனைவி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது அமைச்சரானதால் இந்த வழக்கு வேலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி. தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து அமைச்சரும் அவரது மனைவியும் புறப்பட்டுச் சென்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அமைச்சர் பொன்முடி, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில் சில மாதங்களுக்கு ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதேபோல் ஏப்ரல் மாதத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதையடுத்து மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தனது மனைவி விசாலாட்சியுடன் நேரில் ஆஜராகியுள்ளார்.