ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு பேசிய புதின்!

இரண்டாம் உலகப் போரில் நடந்த அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு புதின் பேசியிருப்பது, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து இருநாடுகள் இடையே எல்லை பிரச்சனை தீவிரமானது. ரஷ்யாவை சமாளிக்க உக்ரைன் நாட்டோவில் இணைய முடிவு செய்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உக்ரைன் கேட்கவில்லை. இதனால் கடந்த பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் அந்நாட்டு படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கின. இதனால் பயந்துபோன பொதுமக்கள் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்துள்ளன. உக்ரைனின் பல்வேறு முக்கிய இடங்களை ரஷ்யா வான்வெளி தாக்குதல் மூலம் தகர்த்துள்ளது. தாய்நாட்டை காக்க உக்ரைன் படை வீரர்கள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். இதனால் ரஷ்யா-உக்ரைன் இடையே வீரர்கள், பொதுமக்கள் மரணமடைந்து வருகின்றன. தற்போது 8 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.

ரஷ்யாவை ஒப்பிடும்போது உக்ரைன் ராணுவம் மிகவும் சிறியது. இருப்பினும் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன், ரஷ்யாவை எதிர்த்து நிற்கிறது. மேலும் அந்நாட்டு வீரர்களும் ரஷ்ய படைகளை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க போரை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதியாக உள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து எதிரான நிலைப்பாட்டில் உள்ள நிலையில் போரில் வெற்றி பெறுவது அந்நாட்டுக்கு மிகவும் முக்கியமாகும். இதனால் போரை கைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இதற்கிடையே தான் பேரழிவை தரும் வகையிலான அணுஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இதனை ரஷ்யா தரப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது. மாறாக உக்ரைன் உயிரி நச்சுத்தன்மை வாய்ந்த குண்டை வீச திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா கூறி வருகிறது. இந்நிலையில் தான் மீண்டும் தற்போது ரஷ்யா சார்பில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இதற்கு காரணம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பேச்சு தான். அதாவது உக்ரைன் போர் நிலவரம் குறித்து பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் பேசினார். போர் தொடங்கியது முதலே பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் தொடர்ந்து போரை கைவிட கூறி வருகிறார். இருப்பினும் புதின் செவிசாய்க்கவில்லை. இதற்கிடையே சமீபத்தில் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது உக்ரைனின் கெர்சனில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மேற்கு திசை கரையில் இருந்து ரஷ்யா பின்வாங்க உறுதியளிப்பது தொடர்பாக கூறப்பட்டது. மேலும் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் பற்றிய சில குறிப்புகளை விளாடிமிர் புதின் மேற்கொள் காட்டி பேசியுள்ளார். அதாவது ‛‛இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை சரணடைய அணுகுண்டுவெடிப்புகள் கைக்கொடுத்தன. இதனால் ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெற முக்கிய நகரங்களை தாக்கி கைப்பற்ற வேண்டும் என்பது இல்லை. இதற்கு ஜப்பானை பணிய வைக்க 2ம் உலகபோரில் கையாண்ட உக்தியே சாட்சி” என மேற்கொள் காட்டி பேசி உள்ளார். இதுதொடர்பாக டெய்லி மெயில் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

புதினின் இந்த பேச்சால் மேற்கத்திய நாட்டு தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒருவேளை உக்ரைன் போர் நிலவரம் ரஷ்யாவுக்கு எதிராக அமைந்தால் அணுஆயுதங்கள் பயன்படுத்த வாய்ப்பு இருக்குமோ என நினைக்க வைத்துள்ளது. மேலும் உக்ரைன் மீதான போர் நடவடிக்கை துவங்கியது முதலே அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பீதி இருந்து வரும் நிலையில் தான் தற்போது இந்த தகவல் கசிந்துள்ளது. அணு ஆயுத தாக்குதல் என்பது மிகவும் கொடுமையானது. இதனால் தான் அணு ஆயுதங்கள் வைத்திருந்தாலும் எந்த நாடுகளும் அதனை பயன்படுத்துவது இல்லை. ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரில் அணுஆயுத குண்டு வெடிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதற்கு முன்பு இரண்டாம் உலகப்போரின்போது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி முதல் முறையாக அமெரிக்கா, ஜப்பானின் ஹீரோசிமா நகர் மீது ‛லிட்டில் பாய்’ எனும் அணுகுண்டை வீசியது. அதன்பிறகு 3 நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9ல் நாகசாகி நகரில் அமெரிக்கா ‛பேட் மேன்’ எனும் அணுகுண்டை வீசியது. இதில் அமெரிக்கா கணக்குப்படி ஒரு லட்சத்து 35 ஆயிரம் மக்கள் வசித்த ஹீரோசிமாவில் 50 சதவீத மக்கள் 67 ஆயிரத்து 500 பேர் இறந்ததாகவும், 1 லட்சத்து 95 ஆயிரம் பேர் வசித்த நாகசாகியில் 64 ஆயிரம் பேர் இறந்ததாகவும், 70 சதவீத கட்டடங்கள் சேதமானதாகவும் கணக்கிடப்பட்டது. ஆனால் உண்மை நிலவரம் என்பது இன்னும் அதிகமாகும். இது நடந்த பிறகும் அணு ஆயுத கதிரியக்கத்தால் ஜப்பான் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டனர். தாக்குதல் நடந்து நீண்ட காலம் ஆனபோதிலும் கூட மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதோடு, லூக்கேமியா உள்பட வெவ்வேறு புற்றுநோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் தான் அணுஆயுதங்களுக்கு உலக நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து நாடுகளும் அணுஆயுத தாக்குதலின் வீரியத்தை அறிந்து வைத்துள்ளனர். இதனால் தான் தற்போதைய நிலையில் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்திய முதல் மற்றும் கடைசி நாடாக அமெரிக்கா மட்டுமே உள்ளது.