பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது. இது பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படது. அவர் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த சட்டம் அமலில் உள்ளது.
இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ்பி பார்திவாலா, பேலா திரிவேதி ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த 5 நீதிபதிகளில் 3 பேர் 10 சதவீத இடஒதுக்கீடு சரி என்றும் 2 பேர் தவறு எனவும் தீர்ப்பு அளித்துள்ளனர்.
தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகிய இருவர் பத்து சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். மற்ற 3 நீதிபதிகள் இட ஒதுக்கீடை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர். 3:2 என்ற அடிப்படையில், பெரும்பான்மை நீதிபதிகள் இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால், பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் உறுதியாகியுள்ளது.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு; சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார். தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களோடு கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.