அதானி முறைகேடு புகார்: எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வு இன்று காலையில் தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கியது. இன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்க இருந்த நிலையில் அவையில் அதானி பங்கு சந்தை சரிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால், இரண்டு அவையும் முடங்கியது. இதனால் இன்று நாள் முழுக்க அவை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த செவ்வாய் கிழமை குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இறுதியில் அந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடைபெறும். அந்த வகையில் குடியரசுத் தலைவர் முர்மு உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்கியது. அதே நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2023- 2024ல் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நடக்கும் 2022-2023 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் இது 6-6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல முக்கிய அறிவிப்புகளை அவர் பட்ஜெட்டில் வெளியிட்டார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வு இன்று கூடியது. இன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்க இருந்தது. ஆனால் அவை தொடங்கியதும் அவையில் அதானி பங்கு சந்தை சரிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால், இரண்டு அவையும் முடங்கியது. அதானி பங்கு சரி ஹிண்டர்ன்பெர்க் வைத்த புகார்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் கட்சிகள் இரண்டு அவையிலும் கோஷம் எழுப்பின. இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டு இரண்டு அவைகளும் பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் அவை கூடிய போதும் எதிர்க்கட்சிகள் இதே விவகாரத்தை குறிப்பிட்டு கோஷம் எழுப்பியது. இதனால் இன்று நாள் முழுக்க அவை ஒத்திவைக்கப்பட்டது.