ஒன்றிய அரசின் பட்ஜெட் இந்திய ஒன்றியத்திற்கு எந்த வகையிலும் உதவாது: வேல்முருகன்

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மத்திய அரசுக்கு பெரும் வருவாயை அளிக்கும் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா ஒன்றியம், உலகமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கக்கூடிய இச்சூழலில், ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5வது முறையாக 2023 – 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் யாருக்கானது; எந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கானது என பல்வேறு வினாக்கள் எழுகிறது. இதற்கு ஒன்றிய அரசு தான் விளக்க வேண்டும். ஒன்றிய அரசு பட்ஜெட்டில், கர்நாடகா மாநிலத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு என்று சிறப்பு திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்றால் இல்லை. தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி குறித்து அறிவிப்பு இருக்கிறதா என்றால் இல்லை.

இந்திய மாநிலங்களிலேயே இந்திய ஒன்றிய அரசுக்கு நிதியளிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கக்கூடிய ஒரு மாநிலமாக, அதிக அளவில் நிதி வருவாய் வழங்குகிற மாநிலமாக இருக்கிறது. ஆனால், இந்திய ஒன்றிய அரசின் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில், தமிழ்நாட்டிற்கு மிகவும் குறைவான நிதியில் கூட கிள்ளித் தரக்கூடிய நிலை தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் வேளாண் திட்டங்களாக இருந்தாலும் சரி, ரயில்வே திட்டங்களாக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த திட்டமாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டை ஒன்றிய அரசு திட்டமிட்டு வஞ்சிப்பது மட்டும் கண்கூடாகத் தெரிகிறது. மதுரையிலே எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது, பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இன்னும் வேலை தொடங்கப் பெறவில்லை என்பது வெட்கக்கேடானது; வேதனைக்குரியது.

நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ. 9 ஆயிரம் கோடி மட்டுமே என்பது போதாது. கொரோனா பாதிப்பு, விலைவாசி உயர்வு, ஜி.எஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேலை வாய்ப்பை, வாழ்வாதாரத்தை தொலைவிட்டு, மீள முடியாமல் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும், சிறு, குறு தொழிலாளர்களுக்கு எந்த பயனும் அளிக்காது. டெல்லியில் போராடிய விவசாயிகளின் அறப்போராட்டத்தை கருத்தில் கொள்ளாமல், விவசாயிகள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதற்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. மாறாக, ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்பது குறைவானதே தவிர, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, பாதுகாக்க எந்த விதத்திலும் உதவாது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 250 நாள் வேலை வழங்க வேண்டும், வேளாண் பணிகளில் ஊரக வேலை வாய்ப்பை கொண்டு வர வேண்டும் என நாடும் முழுவதும் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து ஒரு அறிவிப்பும் கூட இல்லை என்பது, தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் ஊரக வேலை வாய்ப்பை நம்பியுள்ள கிராம தொழிலாளர்களை வஞ்சிக்கும் செயலாகும். பொதுச் சொத்துக்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது, பொதுச் சொத்துக்களை விற்று பணமாக்குவது, ராணுவம், காப்பீட்டுத் துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது இவை அனைத்தையும் தற்சார்பு இந்தியா என்ற பெயரில் தொடரும் இந்திய ஒன்றிய அரசு, இதற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் தான் இந்த பட்ஜெட்டும் அமைந்துள்ளது.

அதானி குழுமத்தின் மோசடியால் பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், அரசுக்குச் சொந்தமான எல்ஐசி, எஸ்.பி.ஐ, பொது நிறுவனங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறித்து ஒரு வார்த்தையும் கூறாமல் அதானிக்கு விசுவாசத்தை காட்டியுள்ளது ஒன்றிய அரசு. மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட இந்திய நாட்டில், மீன்பிடி தொழிலை நம்பி லட்சக்கணக்கான மீனவர்கள் உள்ள நிலையில், அவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், இயற்கைக்கு எதிரான மரபணு மாற்ற மீன் உற்பத்திக்கு ஊக்கமளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதோடு, மீன் உற்பத்தியை கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கையாகும். எனவே, ஒன்றிய அரசின் பட்ஜெட் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்திய ஒன்றியத்திற்கு எந்த வகையிலும் உதவாது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.