கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்க்காமல் இருக்க முடியாது: அன்புமணி

கருணாநிதி மீது தாங்கள் அளவுகடந்த அன்பு வைத்திருந்தவர்கள் என்றும், ஆனால் அதற்காக கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்க்காமல் இருக்க முடியாது எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அது தொடர்பான சட்டபூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமானது இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பலரும் ஆதரித்தும், எதிர்த்தும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இதனிடையே இந்த விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என அன்புமணி ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அப்போது அவர் கூறியதாவது:-

கலைஞர் மீது நாங்கள் அளவு கடந்து வைத்திருந்த அன்பின் காரணமாக மெரினா கடற்கரையில் கட்டுமானங்கள் கூடாது என நாங்கள் நடத்தி வந்த வழக்கினை திரும்ப பெற்றுக் கொண்டோம். கலைஞர் மீது கொண்ட அன்பின் காரணமாக இரவோடு இரவாக நான் சொன்னதன் பேரில், எங்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் வழக்கை திரும்ப பெற்றனர். அதன் பின்னர் தான் நீதிமன்றம், மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் அருகே கலைஞருக்கு இடம் ஒதுக்க அனுமதி அளித்தது. ஆனால் தற்போது, பேனா நினைவுச் சின்னத்தை கடலில் அமைப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் கடல் என்பது சுற்றுச்சூழல் சார்ந்த ஒன்று. இன்று கலைஞருக்கு நினைவுச் சின்னம் வைக்கிறோம் என்றால், மற்றவர்களும் எதிர்காலத்தில் அவரவர்களின் சின்னங்களை அங்கே வைக்க வேண்டும் என வரிசையாக வந்து நிற்பார்கள். தவறான முன்னுதாரணமாக இந்த நினைவுச்சின்னம் இருந்துவிடக் கூடாது. அவ்வாறு ஒவ்வொருவராக வந்து சின்னம் அமைக்கப்பட்டால், கடல் சீரழிக்கப்பட்டு விடும். அவ்வாறு சீரழியாத வண்ணம் நினைவு சின்னத்தினை கடலில் அமைக்காமல், அருகிலேயே இருக்கும் கலைஞர் நினைவிடத்தின் வளாகத்திலேயே அமைத்திட வேண்டும் என்பதை எங்கள் கோரிக்கையாக நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அன்புமணி கூறினார்.