அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய காத்திருப்பதாக ஈரான் தளபதி தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது. அதைத் தொடர்ந்து கடந்த 2020 ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க ராணுவப் படை ட்ரோன் தாக்குதல் நடத்தியதில், ஈரானின் சக்தி வாய்ந்த உயர்மட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். ‘‘வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அதிபர் ட்ரம்பின் உத்தரவின் பேரில், ஈரான் தளபதி காசிமைக் கொல்லும் முடிவு எடுக்கப்பட்டது. உலகின் எந்த மூலையில் அமெரிக்கர்கள் இருந்தாலும் அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்” என அமெரிக்கப் பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் இந்த தாக்குதலுக்கு விளக்கமளித்தது.
அதேபோல் இது குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ‘‘ஈராக்கில் உள்ள அமெரிக்கர்கள் மற்றும் வீரர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஓர் அமெரிக்கக் குடிமகன் உட்பட நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனுடன் பாக்தாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவை அனைத்தும் சுலைமானியின் வழிகாட்டுதலின்படியே நடந்துள்ளன.
அமெரிக்கா இத்தகைய செயலை நீண்ட காலத்துக்கு முன்னரே செய்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவரவே நாங்கள் இத்தகைய நடவடிக்கை எடுத்தோம், போரை உருவாக்க அல்ல’’ என அவர் தெரிவித்தார்.
ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் தீராப்பகை உருவானது. இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் எனவும் தாக்குதலுக்கு உத்தரவிட்ட டொனால்ட் ட்ரம்பை கொல்வோம் எனவும் ஈரானின் மூத்த தலைவர்களும், மதத்தலைவர்ளும் பகிரங்கமாக அறிவித்தனர்.
இந்தநிலையில் ட்ரம்பை கொல்ல கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகள் தாயார் நிலையில் இருப்பதாக ஈரான் தளபதி தெரிவித்துள்ளார். இது குறித்து அரசு தொலைக்காட்சிக்கு ஈரான் உயர்மட்ட புரட்சிகர காவலர்களின் விண்வெளிப் படையின் தலைவரான அமிராலி ஹாஜிசாதே அளித்த பேட்டியில், ‘‘ஈரான் 1,650 கிமீ (1,025 மைல்) தூரம் வரை செல்லக்கூடிய கப்பலில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணையை உருவாக்கியுள்ளது. பல மைல்கள் சென்று தாக்கும் நமது கப்பல் ஏவுகணை ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கடவுள் சித்தமானால், நாங்கள் டிரம்பைக் கொல்லப் பார்க்கிறோம். அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் சுலைமானியைக் கொல்ல உத்தரவு பிறப்பித்த இராணுவத் தளபதிகளும் கொல்லப்பட வேண்டும். ஈராக்கில் உள்ள அமெரிக்க தளத்தில் உள்ள வீரர்களை கொலை செய்ய நாங்கள் விரும்பவில்லை. அதிகாரத்தில் இருந்தவர்களின் ஆணைகளை செயல்படுத்தும் கருவி தான் வீரர்கள். எனவே எங்களது இலக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் சில ராணுவ தளபதிகளும் தான்’’ என அவர் தெரிவித்துள்ளார்.