வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரானது காரல் மார்க்ஸின் சமதர்ம கோட்பாடு: சு.வெங்கடேசன்!

வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரானது காரல் மார்ஸின் சமதர்ம கோட்பாடு என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கார்ல் மார்க்ஸ் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், இந்தியா சாதி, இனம் என பிளவுப்பட்டுள்ளது. கடந்த 7 தலைமுறைகளை கடந்து வறுமை, பசி, ஆரோக்கியமின்மை, கல்வியின்மை நிலை ஆகியவற்றை ஒழிக்க முடியாமல் உள்ளோம். இதற்கெல்லாம் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய மனநிலையை பின்பற்றுவது தான். 75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கும் அதுவே காரணம். கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது. இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கு சிபிஎம், சிபிஐ, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் சார்பாக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை தெற்குவாசல் பகுதியில் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சு.வெங்கடேசன் கூறியதாவது:-

2 நாட்களுக்கு முன் ஆளுநர் ஆர்.என்.ரவி, காரஸ் மார்க்ஸ் மற்றும் டார்வின் கோட்பாடுகள் பற்றி அவதூறாக பேசி இருக்கிறார். இதற்கு சிபிஎம் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மனித பரிமாண விதியை கண்டறிந்தவர் டார்வின். மனித சமூகத்தின் பரிமாண வளர்ச்சியை கண்டறிந்தவர் காரல் மார்க்ஸ். அவர்கள் இருவரும் 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள். ஆனாலும் இன்றுவரை மத பழமைவாதிகள், அடிப்படைவாதிகள் டார்வினின் கோட்பாடுகளை பயந்து எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குரல் தான் ரவியின் பேச்சில் எதிரொலித்தது.

அதேபோல் 2 மாதங்களுக்கு முன் வர்ணாசிரம தர்மத்தால் தான் இந்தியா கட்டமைக்கப்பட்டதாக ஆர்.என்.ரவி பேசினார். அதனால் தான் இன்று காரல் மார்க்ஸை எதிர்த்து பேசி இருக்கிறார். வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரானது காரல் மார்க்ஸின் சமதர்ம கோட்பாடு. எனவே வர்ணாசிரம தர்மத்திற்கு ஆதரவாக பேசும் ரவி, சமதர்மத்திற்கு எதிராக பேசுவது இயல்புதான். அதனால் தான் தமிழ்நாட்டின் சமூக சிந்தனை வளர்ச்சியை கண்டு ஆர்.என்.ரவியின் பேச்சு கொந்தளிப்பாக இருக்கிறது.

காரல் மார்க்ஸ் என்ன செய்தார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்கிறார். ஆளுநரின் நிபந்தனை விதிகளை பேசுகிற அரசியல் சாசன சட்டத்தின் 158வது பிரிவின் 4வது பகுதி பேசுகிறது. அதில், ஆளுநரின் ஊதியத்தையும், படியையும் அவரது பதவிக் காலத்தில் குறைக்க கூடாது என்று சொல்கிறது. இந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கும் வரலாறு தெரியுமா? உழைப்பவர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்க வேண்டும், ஊதியம் பெற்றாலும் விலைவாசிக்கு ஏற்றபடி அகவிலைப்படி எப்படி உருவாக்கப்பட வேண்டும், ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஊதியம், அகவிலைப்படி எப்படி உறுதிப்படுத்த வேண்டும் என்பதை அரசியல் சாசன சட்டத்தில் இடம்பெறுவதற்கு காரல் மார்ஸின் சிந்தனைகளும், கோட்பாடுகளும் தான் மூலக் காரணம். எனவே தான் சமதர்ம கோட்பாடுகளுக்கு எதிராக பாய்கிறீர்கள். டார்வின், பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் மீதான உங்களின் கருத்துக்கள் தமிழ்ச் சமூகத்திற்கும், இந்திய சமூகத்திற்கும் எதிரானது. அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.