மேற்கு வங்காளத்தில் மத்திய இணை அமைச்சர் கார் மீது தாக்குதல்!

மேற்கு வங்காளத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நிஸித் பிரமனிக் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அமைச்சர் காரின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது. கார் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசி கலைத்தனர்.

மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி மத்தியில் ஆளும் பாஜகவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிரான ஒரு அணியை திரட்டுவதிலும் மம்தா பானர்ஜி முனைப்பு காட்டி வருகிறார். பிரதமர் மோடியை மிகக் கடுமையாக எதிர்க்கும் மாநில முதல்வர்களில் ஒருவராக மம்தா பானர்ஜி உள்ளார். மாநிலத்திலும் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவுடன் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை எலியும் பூனையுமாக இரு கட்சிகளும் மோதி வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் கூச் பெஹார் தொகுதி எம்.பியும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான நிஸித் பிரமனிக் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனது தொகுதியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு காரில் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்த படி மத்திய அமைச்சர் நிஸித் பிரமனிக் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் அணிவகுப்பு மீது கற்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீசியதாக கூறப்படுகிறது. இதில் மத்திய அமைச்சரின் எஸ்.யூ.வி ரக காரும் சேதம் அடைந்தது. காரின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அங்கு கற்களை வீசி கூட்டத்தை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் நிஸித் பிரமனிக் தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், “ஒரு அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். மேற்கு வங்காளத்தில் இருக்கும் ஜனநாயகத்தை எடுத்துக்காட்டுவதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது” என்றும் பதிவிட்டுள்ளார்.