தமிழ்நாட்டில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!

தமிழ்நாட்டில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,329 சில்லரை விற்பனை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கட்சிகளின் விற்பனை மூலம் அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.36,056 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்தது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அரசாணையை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டு முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு.

மதுவிலக்குத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், மூடப்படும் மதுபானக் கடைகளின் பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் தயார் செய்து வந்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகள், கோயில்களுக்கு அருகே உள்ள 500 மதுபானக் கடைகளை மூட அரசு முடிவு செய்யப்பட்டது. தற்போது, மூடப்படும் 500 கடைகளை அடையாளம் காணும் பணிகள் நிறைவடைந்து, பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. 500 டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளை மூட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், நாளை முதல் தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை மண்டலத்தில் 138 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. கோவை மண்டலத்தில் 78 கடைகள், மதுரை மண்டலத்தில் 125 டாஸ்மாக் கடைகள், சேலம் மண்டலத்தில் 59 கடைகள், திருச்சி மண்டலத்தில் 100 டாஸ்மாக் நாளை முதல் கடைகள் மூடப்பட உள்ளன.