சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு!

சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.371 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில், குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சந்திரபாபு நாயுடு பலனடைந்திருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த விஜயவாடா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சந்திரபாபுவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, விஜயவாடா அருகே அமைந்துள்ள ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததன் காரணமாக ஜாமீன் வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தரப்பில் விஜயவாடா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் அடைப்பதற்கு பதில் வீட்டுக்காவலில் வைக்கக்கோரியும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுவை விஜய்வாடா நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் வீட்டுக்காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.