முதலில் சீனாவை லடாக், அருணாச்சலில் இருந்து விரட்டுங்க: சஞ்சய் ராவத்

மணிப்பூர், லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து சீனாவை விரட்டிவிட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைப்பது பற்றி பேசுங்கள் என மத்திய பாஜக அரசுக்கு உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளான கில்கிட், பல்டிஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. இப்போராட்டங்கள், தற்போது நாங்கள் இந்தியாவுடனேயே இணைகிறோம் என புதியதாக உருமாறி இருக்கிறது. சலோ! சலோ! கார்கில் சலோ என இந்தியாவை நோக்கி இந்தப் போராட்டங்களில் முழக்கங்கள் எழுப்பப்படுவதாக சமூக வலைதளப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மத்திய அமைச்சர் விகே சிங் கூறுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இந்தியாவுடன் தாமாகவே இணையும் அதுவரை காத்திருப்போம் என்றார்.

பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீர் குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-

எங்களுக்கும் “அகண்ட பாரத” கனவு என்பது இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதில் எப்போதும் உறுதியாகவே இருக்கிறோம். ஆனால் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசுகிற மத்திய அமைச்சர் விகே சிங், ராணுவ தளபதியாக இருந்தார். அப்போது அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கும் நடவடிக்கைகளை செய்திருக்க வேண்டும். இப்போது எப்படி இணைத்துவிட முடியும்? இருந்தபோதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதை நாம் வரவேற்கிறோம். அதற்கு முன்னதாக மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை உருவாக்குங்கள். சீனா, மணிப்பூரில் ஊடுருவி இருக்கிறது. லடாக்கில் சீனா ஊடுருவி நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அருணாச்சல பிரதேச மாநிலத்தையே தங்களது நாட்டின் பகுதியாக இணைத்து வரைபடம் வெளியிட்டிருக்கிறது சீனா. ஆகையால் இந்த பிரச்சனைகளுக்கு முதலில் முடிவு கட்டுங்கள்.. அப்புறமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கலாம். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.