ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எக்ஸ்ரே போன்றது: ராகுல் காந்தி!

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எக்ஸ்ரே போன்றது. இது நாட்டில் எத்தனை பெண்கள், ஓபிசி, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளனர் என்பதை அறிய உதவும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதிய காங்கிரஸ் அலுவலகத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அக்கட்சியின் எம்பி ராகுல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது:-

முதலில், மத்திய அரசு பெண்கள் இடஒதுக்கீடு பற்றி பேசவில்லை. அவர்கள் இந்தியா பெயரை பாரத் என மாற்றுவது குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை அறிவித்தனர். ஆனால் மக்கள் அதை ஏற்கவில்லை. சிறப்பு கூட்டத்தொடர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால் பீதியடைந்தனர். அதனால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தனர்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாங்கள் ஆதரித்தோம். பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என பாஜ., கூறுகிறது. ஆனால் உண்மையில் 33% இட ஒதுக்கீட்டை இன்றே நடைமுறைப்படுத்தலாம். ஆனால் பாஜ., இடஒதுக்கீட்டை 10 ஆண்டுகள் தாமதப்படுத்த விரும்புகிறது. அதை அமல்படுத்த வேண்டும். ஓபிசி பெண்கள் பயன்பெற வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்.

ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, எலும்பு முறிவு உள்ளதா என்பதை அறிய எக்ஸ்ரே எடுக்கச் சொல்வார்கள். அதேபோல், ஜாதிவாரி கணக்கெடுப்பும் எக்ஸ்ரே ஆகும். இது நாட்டில் எத்தனை பெண்கள், ஓபிசி, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளனர் என்பதை அறிய உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

எங்களை எதிர்த்து பாஜ., அவர்களது வேட்பாளர், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை என நான்கு வேட்பாளர்களை நிறுத்துகிறது. இவை அனைத்திற்கும் எதிராக நாம் வெற்றி பெற வேண்டும். நாங்கள் கூட்டங்கள் நடத்தும் போது, எங்கள் கட்சியினர் வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது. புதிய பார்லி., கட்டட திறப்பு விழாவிற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்முவை கூட அழைக்கவில்லை. பாஜ., சினிமா துறையை சேர்ந்தவர்களை அழைத்தார்கள். ஜனாதிபதி முர்முவை ஏன் அழைக்கவில்லை?. இவ்வாறு அவர் பேசினார்.