சீனாவில் நடக்கும், 19வது ஆசிய விளையாட்டு போட்டி களில் பங்கேற்க, அருணச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தடகள வீரர்களுக்கு விசா தர மறுத்த சீனாவின் செயலுக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின், ஹாங்ஸோ நகரில், 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று துவங்குகின்றன. நம் நாட்டின் சார்பில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு சீன அரசு விசா வழங்கி வருகிறது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தடகள வீரர்களுக்கு விசா வழங்க சீனா மறுத்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில், இந்தியா – சீனா இடையே பல ஆண்டுகளாக உரசல் நிலவி வருகிறது. அப்படியிருக்கையில், அருணாச்சல பிரதேச விளையாட்டு வீரர்களுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் அங்கீகாரம் அளிக்க மறுத்துள்ள சீனாவின் நடவடிக்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து நம் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று கூறியதாவது:-
அருணாச்சல பிரதேச தடகள வீரர்களை குறிவைத்து, திட்டமிட்டே அவர்களுக்கான அங்கீகாரத்தை சீனா மறுத்து உள்ளது. இந்திய குடிமக்களை பாகுபாடுடன் நடத்துவதை ஏற்க முடியாது. எங்கள் நலனை காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி. அப்படி இருக்கையில், சீனாவின் இந்த நடவடிக்கை, ஆசிய விளையாட்டு போட்டி களின் நிர்வாக விதிகளை மீறுவதுடன், ஒரு நாட்டின் குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் மீது பாரபட்சம் காட்டுவதை வெளிப்படையாக உணர்த்துகிறது. இந்த நடவடிக்கைக்கு எங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக, ஆசிய விளையாட்டு போட்டி களை பார்வையிடுவதற்காக சீனா செல்ல இருந்த மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், தன் பயணத்தை ரத்து செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., – எம்.பி.,யும், மத்திய அமைசருமான கிரண் ரிஜிஜு வெளியிட்ட அறிக்கையில், அருணாச்சல பிரதேச விளையாட்டு வீரர்களுக்கு விசா மறுத்துள்ள சீன நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அருணாச்சல பிரதேசம் சர்ச்சைக்குரிய பகுதி அல்ல. அது, இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி. அம்மாநிலத்தின் மீது சீனா உரிமை கோருவதை அருணாச்சல் மக்கள் உறுதியுடன் எதிர்க்கின்றனர். சீனாவின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.