அதிமுகவுடன் டெல்லி தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது: டாக்டர் கிருஷ்ணசாமி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவை மீண்டும் இணைப்பதற்காக டெல்லி தலைமை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது; விரைவில் சுமூக முடிவு எட்டப்படும் என அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அதிமுகவுக்கு மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதா, அண்ணா,எடப்பாடி பழனிசாமி என தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்ததால் இந்த மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை இன்று மீண்டும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி உறுதி செய்தார். மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் பாஜக கூட்டணிக்கு அதிமுக செல்லாது. 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் தனி கூட்டணி உருவாக்கப்படும். 2026 சட்டசபை தேர்தலுக்கும் இதே நிலைப்பாடுதான் எனவும் கேபி முனுசாமி கூறியிருந்தார்

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுகவுடன் டெல்லி தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜக கூட்டணியில் அதிமுகவை மீண்டும் இடம் பெறச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக டெல்லி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.