ஆந்திர முன்னாள், முதல்வர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவரது மகன் நாரா லோகேசுக்கு அமராவதி உள்வட்ட சாலை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவை கைது செய்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தான் சந்திரபாபு நாயுடு தனக்கு எதிரான வழக்கை ரத்த செய்யக்கோரியும், ஜாமீன் கோரியும் ஆந்திர சிறப்பு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. இதனால் சந்திரபாபு நாயுடு சிறையிலேயே உள்ளார். இதற்கிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே தான் தற்போது சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் சிக்கலில் சிக்கி உள்ளார். அதாவது அமராவதி உள்வட்டசாலை பணியில் ஊழல் வழக்கு தொடர்பாக சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவின் மகனும் தெலுங்குதேசம் கட்சிப் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் தான் வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நாரா லோகேசுக்கு சிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்த சம்மனை பெற்றுள்ள நாரா லோகேஷ் அக்டோபர் 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது மகனுக்கும் சிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இதற்கிடையே தான் அவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.