காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா சீராய்வு மனு தாக்கல்!

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடக அரசு ஆணையத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் தமிழ்நாடுக்கும் கர்நாடகாவிற்கும் இடையே மோதல் நீடிக்கிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் பிறப்பிக்கிற உத்தரவுகளுக்கு கர்நாடகம் கட்டுப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுகளில் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கூடிய காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது. இந்த பரிந்துரையை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 3 ஆயிரம் கன அடி நீர் என்பதை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று கர்நாடகா தெரிவித்துள்ளது. கர்நடகா தாக்கல் செய்துள்ள மனுவில், தற்போதைய சூழலில் தண்ணீர் திறக்க முடியாத சூழலில் இருக்கிறோம். கர்நாடகாவின் கருத்தை கருத்தில் கொள்ளாமல் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று கூறியுள்ளது. மேலும் மேகதாது அணை விவகாரத்தையும் உடனே விசாரிக்க வேண்டும் எனவும் தனது மனுவில் கூறியுள்ளது. காவிரியில் நீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருபக்கம் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கர்நாடக அரசு ,காவிரி மேலாண்மை ஆணையத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.