ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வேல்முருகன் கைது!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செயப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட மறுத்து வரும் கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று சென்னையில் பேரணி நடைபெற்றது.
காவிரி எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன் வைத்தும், தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கன்னட அமைப்புகள் அவமதித்ததை கண்டித்தும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் பேரணியை மேற்கொண்டு, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய வேல்முருகன், “தமிழர்களுக்கு விரோதம் செய்யும் கர்நாடக அரசுக்கு மத்திய பாஜக அரசு ஆதரவு வழங்குகிறது. அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவமதிப்பு செய்கின்றனர். கர்நாடக மண்ணில் தமிழர்களுக்கு சிறு கீறல் ஏற்பட்டாலும், அதை நாங்கள் விடமாட்டோம்.” எனத் தெரித்துள்ளார்.

இதற்கிடையே, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவாக தலைவர் வேல்முருகன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.