அமலாக்கத்துறையும், பாஜகவும் பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

பாஜக தலைமை அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டது பற்றி சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செப்டம்பர் 17ஆம் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்றது. ரியல் எஸ்டேட் தொழிலபதிபர்களுக்கு சொந்தமான இடங்கள், அவர்களுக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. தென்சென்னை பாஜக மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஜோதிக்குமார் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. ஆனால், அதன்பிறகு இந்த சோதனை எதற்காக நடைபெற்றது என்றோ, என்ன கைப்பற்றப்பட்டது என்றோ ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து சிபிஐம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அன்று பாஜக மாநில தலைமை அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட்டில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்றுள்ளது. இந்த சோதனைகள் பற்றி அமலாக்கத்துறையோ, பாஜகவோ இதுவரையிலும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. இது அமலாக்கத்துறையின் மீது நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது.

சாதாரணமாக அமலாக்கத்துறையின் சோதனைகள் அதன் தொடர்பான விபரங்கள் பெரிய அளவில் பேசப்படுவது வழக்கமான உள்ள நிலையில் இந்த சோதனை மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. இது கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறது. எனவே, அமலாக்கத்துறையும், பாஜகவும் பொதுமக்களுக்கு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

1. பாஜக தலைமை அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட்டில் 5 மணி நேரம் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன?

2. அமலாக்கத்துறையின் சோதனையின் போது பாஜகவின் தென்சென்னை மாவட்ட தலைவர்கள் மிக சாதாரணமாக சோதனை நடக்கும் இடத்திற்கு வருவதும், வெளியே வந்து தொலைபேசியில் பேசுவதுமாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டது எப்படி?

3. பாஜக நிர்வாகிகள் மேலிடத்தில் தொடர்பு கொண்டு இந்த சோதனையை நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதால் அமலாக்கத்துறை நிறுத்தி விட்டதாக சொல்வது உண்மையா?

4. தவறாக ஒரு சோதனை நடத்தப்பட்டிருந்தால் பாஜக தரப்பிலிருந்து கண்டனமோ, அமலாக்கத்துறையின் தரப்பிலிருந்து விளக்கமோ அளிக்கப்படாதது ஏன்?

எனவே, அமலாக்கத்துறையும், பாரதிய ஜனதா கட்சியும் மேற்கண்ட அமலாக்கத்துறை சோதனை சம்பந்தமாக பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும். ஒரு தவறை கண்டுபிடிப்பதற்காக அமலாக்கத்துறை வந்திருந்தது என்றும் மேலிட தலையீடுகளின் காரணமாக அது நிறுத்தப்பட்டது என கருத வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்கட்சிகளை பழிவாங்கும் துறையாக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவதும், அதே சமயம் பாஜக தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்வதில்லை என்ற கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதனை மேலும் உறுதிபடுத்தும் வகையிலேயே மேற்கண்ட சம்பவம் நடந்துள்ளது என மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது. எனவே, உரிய விளக்கத்தை அமலாக்கத்துறை பொதுமக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.