டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி திடீர் மாற்றம்!

2 ஆண்டுகளுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்.சி செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, வணிகவரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்து வந்தார் உமாமகேஸ்வரி. இந்நிலையில், திடீரென அவர் மாற்றப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய செயலாளர் உமாமகேஸ்வரி, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சார்ந்த பல்வேறு முக்கிய பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக டிஎன்பிஎஸ்சி செயலாளராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. விரைவில் நியமன அறிவிப்பு வரக்கூடும் எனத் தெரிகிறது.

டிஎன்பிஎஸ்சியின் பல்வேறு விதமான குரூப் தேர்வுகளை ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதி வருகின்றனர். தேர்வுகள் அறிவிப்பு, தேர்வு நடத்தும் பணிகள், தேர்வு முடிவுகள் என ஆண்டு முழுவதும் டிஎன்பிஎஸ்சி பணிகள் இருக்கும். இந்நிலையில், திடீரென டிஎன்பிஎஸ்சி செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதங்கள் ஏற்படலாம் என தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழக காவல்துறை டிஜிபியாக இருந்து கடந்த ஜூன் 30ஆம் தேதி ஓய்வுபெற்ற சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 8 பேரையும் புதிதாக நியமித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த கோப்புகளை தமிழக அரசுக்கே ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். இந்த பதவிகளுக்கான விண்ணப்பம் குறித்து வெளியிடப்பட்ட விளம்பரம், பெறப்பட்ட விண்ணப்பங்கள், பரிந்துரை செய்யப்பட்டவர்களின் விவரங்கள், அவர்கள் இறுதி செய்யப்பட்டது எப்படி? நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பது உட்பட பல்வேறு விவரங்களை அதில் ஆளுநர் கோரியிருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதாகக் கூறி மீண்டும் ஆளுநருக்கு ஃபைல் அனுப்பப்பட்டது. டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை தெரிவித்து, வேறொருவரை தலைவராக பரிந்துரைக்குமாறு தமிழக அரசுக்கு அந்த கோப்பை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தலைவர் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் மாற்றப்பட்டிருப்பது கவனிக்கப்பட்டுள்ளது.