தமிழக ஆளுநர் உடனான முதலமைச்சர் ஸ்டாலினின் சந்திப்பு சுமுகமாக இருந்தது: அமைச்சர் ரகுபதி!

இன்று முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இந்த சந்திப்பு குறித்து அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகைக்குச் சென்று இன்று சந்தித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள மசோதாக்கள் ஒப்புதல் வழங்க ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளதால், அவற்றிற்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ரவி தாமதப்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், திருப்பி அனுப்பப்பட்ட, மசோதாக்களை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி அனுப்பினால் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது என அரசியலமைப்பின் 200-வது பிரிவை சுட்டிக்காட்டினர். மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்து சுமுகமாக பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அந்த அடிப்படையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அப்போது தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் இருந்ததால் அந்தப் பணிகளை பார்வையிடுவதற்காக, பிறிதொரு நாளில் சந்திப்பதாக பதில் அளித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில் தான் இன்று ஆளுநரை சந்தித்துப் பேசியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்தச் சந்திப்பின் போது அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆளுநர் – முதல்வர் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், “ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஆளுநரை சந்தித்தோம். 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். 20 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். 8 மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மசோதா மட்டும் தமிழக ஆளுநரிடம் உள்ளது. வேளாண் விளைபொருள் சட்ட முன்வடிவு மசோதா மட்டும் ஆளுநரிடம் உள்ளது. நிலுவையில் வைத்துள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் நியமனம் குறித்தும் பேசியுள்ளோம். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கேசி வீரமணி, சி.விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி கோரினோம். சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பாக 49 கோப்புகள் ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. தமிழக ஆளுநர் உடனான முதலமைச்சர் ஸ்டாலினின் சந்திப்பு சுமுகமாக இருந்தது. விடை என்ன என்பதை நீதிமன்றத்தில் தான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், மசோதாக்களுக்கு நீங்களே அனுமதி அளித்திருக்கலாம் என தமிழக ஆளுநரிடம் கூறினோம், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியதில்லை என்பதே எங்கள் கருத்து எனத் தெரிவித்துள்ளார்.