நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை செலுத்த கால அவகாசம் பிப்.1 வரை நீட்டிப்பு!

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த 02.01.2024 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது கூடுதலாக 01.02.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளதாவது:-

கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு கூடுதல் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின் உபயோகிப்பாளர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 02.01.2024 வரை இருந்த நிலையில், அபராதத் தொகை இல்லாமல் 01.02.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

2. இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.