ரஷ்யாவுடனான போரில் 31 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு: ஜெலன்ஸ்கி

ரஷ்யாவுடனான போரில் 31 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கி இரண்டு ஆண்டு நிறைவடைந்துள்ளது. மூன்றாம் ஆண்டாக போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போர்க்களத்தில் வெற்றிக்காக உக்ரைன் வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

உக்ரைனின் வெற்றி மேற்கத்திய நாடுகளின் ஆதரவை சார்ந்துள்ளது. உக்ரைனுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும். ரஷ்யாவுடனான இரண்டு வருட போரில் 31 ஆயிரம் உக்ரேனிய வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். ஆனால் ரஷ்ய அதிபர் புதினோ, ஒன்றரை முதல் 3 லட்சம் உக்ரேனிய வீரர்கள் உயிரிழந்ததாக பொய் சொல்லி வருகிறார். எங்கள் வீரர்களின் இழப்புகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்ய அதிபர் புதினுடன் பேசுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உங்களால் காது கேளாத நபருடன் பேச முடியுமா? எதிரிகளைக் கொல்லும் ஒரு மனிதனுடன் பேச முடியுமா? அவர் 2030ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருக்க நினைக்கிறார். ஆனால் நாங்கள் விரைவில் வீழ்த்த விரும்புகிறோம்.” என்றார்