தமிழக அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ராமேசுவரம் மீனவர்கள் நேற்று மாலை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர்.
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ், இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்கும் நடைமுறையை இந்த மாதம் முதல் அமல்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறையும், படகு ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து 4 மீனவர்களையும் அந்நாட்டுச் சிறையில் அடைத்தது இலங்கை அரசு.
இந்தப் புதிய சட்டத்தைக் கண்டித்தும், சிறைத் தண்டனை வழங்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை காலை தொடங்கினர்.
இரண்டாவது நாளாக நேற்று உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா தலைமையில் மீனவர்கள், மீனவப் பெண்கள் திரளாக கலந்துகொண்டனர். நேற்று மாலை 5 மணியளவில் உண்ணாவிரதப் பந்தலில் தமிழக அரசு சார்பாக ராமநாதபுரம் எம்எல்ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு திமுக சார்பில் நிவாரண நிதியும் வழங்கப்பட்டது.
பேச்சுவார்த்தையின்போது மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், ராமேசுவரம் மீனவர்கள் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் வாங்கித் தருவதாகவும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மீனவர்கள் திரும்பப் பெற்றனர்.