தமிழகத்தில் கொள்ளை அடிக்க இண்டியா கூட்டணி முயற்சி: பிரதமர் மோடி

“டெல்லியில் எல்லாம் இண்டியா கூட்டணி வெற்றி பெறாது என்பது தெரிந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் எப்படியாவது கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக அந்தக் கூட்டணி முயற்சித்துக் கொண்டிருக்கிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.

தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, பல்லடம் அடுத்த மாதப்பூரில் இன்று நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘வணக்கம்’ என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். அவர் பேசியதாவது:-

பல்லடம் வந்து இந்தக் கூட்டத்தில் உங்கள் அனைவருடனும் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில், தமிழகத்தின் இந்த கொங்கு மண்டலம் பல வகைகளில் அங்கம் வகிக்கிறது. ஜவுளி, தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதி, இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல், இந்தப் பகுதியில் ஏராளமான தொழில்முனைவோர்களும், சிறு, குறு நிறுவனங்களும் இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்த மிகப் பெரிய மக்கள் வெள்ளத்தைப் பார்க்கும்போது காவிக் கடலை கண்டதுபோல் உள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியில் ஏசி அறையில் அமர்ந்துகொண்டு தமிழகத்தைப் பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால், தமிழகம் தேசியத்தின் பக்கம் என்றைக்கும் இருந்து வருகிறது என்பதை இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த நீங்கள் அனைவரும் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழகம் குறித்து சில விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்வதில் நான் பெருமைக் கொள்கிறேன். 2024-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக குறித்து அதிகமாகப் பேசப்படுகிறது. தமிழகம் நாட்டின் புதிய அரசியல் வளர்ச்சியில் புதிய ஒரு மையமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, வரும் 2024-ம் ஆண்டில் தமிழகம் ஒரு புதிய சரித்திரத்தைப் படைக்க இருக்கிறது. அதற்கு மிகப்பெரிய சான்றாக இந்த என் மண் என் மக்கள் யாத்திரை சான்றாக இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத ஆதரவை கொடுத்துள்ளனர்.

என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் பெயரே சிறப்பானதாகும். ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும் இந்த மண்ணுக்கும் இருக்கும் பிணைப்பை அது காட்டுகிறது. நாடுதான் முதன்மையானது என பாஜக கருதுகிறது. இந்த நாட்டில் உள்ள அனைவருக்காகவும் பாஜக தொண்டர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவுக்கு தமிழகத்தில் மிகப் பெரிய ஆதரவு வந்துகொண்டிருப்பதை நான் கவனித்து வருகிறேன். இந்த யாத்திரையை முன்னெடுத்துச் சென்ற ஆற்றலும், துணிவும் மிக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வெறும் யாத்திரையாக மட்டும் செல்லாமல், அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சியை ஒவ்வொரு வீடாக கொண்டு சேர்த்திருக்கிறார்.

தமிழ் மொழியும் கலாச்சாரமும் மிகவும் சிறப்பு வாயந்தது. அதனால்தான் ஐ.நா. சபையில் உரையாற்றும்போது, என்னைக் கவர்ந்த தமிழ்க் கவிதைகளை அங்கு பேசினேன். எனது நாடாளுமன்றத் தொகுதியில், காசி சங்கமம் என்ற மிப்பெரும் நிகழ்ச்சியை நடத்தினேன். நாட்டின் நாடாளுமன்றத்தில், தமிழகத்தின் செங்கோலை நிறுவி அதற்கு மிகப்பெரிய மரியாதையை கொடுத்திருக்கிறேன். இவைகள் மூலம் தமிழக மக்கள் என் மீது மிகவும் அன்பு கொண்டுள்ளனர் என்று என்னால் கூற முடியும்.

தமிழகத்துக்கும் எனக்கும் வெறும் அரசியல் ரீதியான உறவு மட்டும் இல்லை. எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான உறவாக பார்க்கிறேன். பல ஆண்டு காலமாக இந்த தமிழ் மண்ணோடு நான் பின்னிப்பிணைந்து இருக்கிறேன். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு முன்பாக, 1991-ல் ஒற்றுமை யாத்திரையை நான் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரின் லால் சவுக்கில் நிறைவு செய்தேன். அப்போது என்னுடைய எண்ணம் எல்லாம், இந்த லால் சவுக்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த 370-வது அரசியல் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான். இன்றைக்கு இவை இரண்டையும் நிறைவேற்றி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை நாம் செய்திருக்கிறோம். அதுபோலவே, இந்த என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தை ஒரு புதிய பாதையை நோக்கி வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பாஜக என்றைக்கும் ஆட்சியில் இருந்தது இல்லை. ஆனால், பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு எப்போதுமே இருந்துகொண்டே இருக்கிறது. இது தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நன்றாகத் தெரியும். தமிழகத்தில் பாஜகவின் பலம் பெருகி வருகிறது. அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக மக்களிடம் தமிழகத்தில் கொள்ளையடித்து ஆட்சி நடத்துபவர்கள் தங்களது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, பொய்யான தகவல்களைக் கூறி மக்களைத் திசைத்திருப்பி வருகின்றனர். தமிழக மக்கள் தூய்மையான உள்ளம் படைத்தவர்கள். மிகச் சிறந்த புத்திசாலிகள். எனவே தமிழகத்தை ஆட்சி செய்பவர்களின் அத்தனை நாடகமும் தற்போது வெளியே வந்திருக்கிறது. ஊழல் வெளியே வந்துவிட்டது. இதனால்தான், தமிழகத்தில் பாஜக மீது மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்துகொண்டிருக்கிறது.

தமிழக வளர்ச்சிக்கு பாஜக எப்போதுமே முன்னுரிமைக் கொடுத்து வருகிறது. 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இருந்தபோது தமிழக வளர்ச்சிக்காக கொடுத்த நிதியைவிட கடந்த பத்தாண்டுகளில் மூன்று மடங்கு அதிகமான நிதியை தமிழக வளர்ச்சிக்காக கொடுத்துள்ளோம். தமிழக வளர்ச்சிக்கான அத்தனைப் பணிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. ஆனால், திமுகவும் காங்கிரசும் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்துள்ளனர். 2004-2014 வரையிலான காலக்கட்டத்தில் மிக முக்கியமான பொறுப்புகளில் அங்கம் வகித்தனர். அவர்கள் தமிழக வளர்ச்சிக்கான எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. எனவே, தமிழகத்தின் வளர்ச்சியில் அவர்களுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

தமிழகம் வந்தபோது, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் என் நினைவுக்கு வந்தார். இலங்கையில் அவர் பிறந்த ஊரான கண்டிக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று அவர் மக்கள் பணியாற்றிய இந்த தமிழகத்துக்கு நான் வந்திருக்கிறேன். பத்தாண்டு காலம் அவரது நல்லாட்சி காரணமாக, தமிழகத்துக்கு சிறந்த கல்வியும், சுகாதாரமும் கிடைத்தது. இதனால், தமிழக மக்கள் அவரை பெரிதும் மதித்தனர். இன்று வரை ஏழை மக்கள் ஒவ்வொருவரும் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவராக புகழ்ந்து வருகின்றனர். எம்ஜிஆர் குடும்ப அரசியல் காரணமாக அரசியலுக்கு வரவில்லை. அவரது தனிப்பட்ட திறமையின் காரணமாக முதல்வராக வந்து ஆட்சி நடத்தினார். ஆனால், இன்று தமிழகத்தில் எம்ஜிஆரை அவமதிக்கும் விதமாக திமுகவின் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. எம்ஜிஆருக்குப் பின்னர், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர், தமிழகத்துக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். அண்மையில் தான் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். ஜெயலலிதாவுடன் பணியாற்றிய பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. எம்ஜிஆரின் கொள்கைகளைக் கடைபிடித்து மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர் ஜெயலலிதா.

இப்போது இண்டியா கூட்டணி என்று உருவாகி உள்ளது. டெல்லியில் எல்லாம் இண்டியா கூட்டணி வெற்றி பெறாது என்பது தெரிந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் எப்படியாவது கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக அந்த கூட்டணி முயற்சித்துக் கொண்டிருக்கிறது. 2024-ல் அந்த கொள்ளையடிக்க நினைக்கும் கடையை மூட வேண்டும். இந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலம் அதற்கான பூட்டை நாம் உருவாக்கி இருக்கிறோம். தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்ககு வரவேண்டும் என்றால், பாஜக தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் சென்று அவரது ஆசீர்வாதங்களையும், வாக்குகளையும் பெற வேண்டும். மோடியின் உத்தரவாதம் உங்களுக்கு இருந்து கொண்டிருக்கிறது. எனவே, மக்களின் ஆதரவை நீங்கள் பெற வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

முன்னதாக, விழா நடந்த மேடைக்கு திறந்தவெளி ஜீப்பில் வந்த பிரதமர் மோடி கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்களை நோக்கி கை அசைத்தபடி வந்தார். விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு ஜல்லிக்கட்டுக் காளையின் சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல், மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் நினைவாக பிரதமர் மோடிக்கு 65 கிலோ எடை கொண்ட மஞ்சள் மாலை அணிவிக்கப்பட்டது.