புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டணி அரசாங்கத்தை வழி நடத்த ஷெபாஸ் ஷெரீப் 2-வது முறையாக நாட்டின் பிரதமராக தேர்வாகியுள்ளார்.
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேசிய சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவுடன் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 உறுப்பினர்களில் பிரதமராக 169 உறுப்பினர்கள் ஆதரவு போதும் என்ற நிலையில் ஷெபாஸ் 201 வாக்குகள் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளார். இம்ரான் கான் ஆதரவு பெற்ற ஒமர் ஆயுப் கான் 92 வாக்குகள் பெற்றார். முன்னதாக, ஷெரீப் முன்மொழிந்த அயாஸ் சாதிக், நாடாளுமன்ற சபாநாயகராக வெள்ளிக்கிழமைத் தேர்வு செய்யப்பட்டார். ஷெபாஸ் ஷெரீப், குடியரசுத் தலைவர் மாளிகையான ஐவான்-இ-சதரில் திங்கள்கிழமை பதவி ஏற்றுக்கொள்கிறார்.
