தமிழகத்தில் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரிய மனு தள்ளுபடி!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எழிலன் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கில், தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏழு கட்ட வாக்குப்பதிவுக்குப் பின், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 45 நாட்களுக்கு மேல் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்க வேண்டிய நிலை உள்ளது. தேர்தல் அறிவிப்பு அரசியல் சட்ட விதிகளையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளையும் மீறும் வகையில் உள்ளது. எனவே, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு என்பது முழுக்க முழுக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இந்த வழக்கு விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், தேர்தல் நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்த காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.