75 ஆண்டுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கியது துபாய்!

சமீபத்தில் ஓமனில் பெய்த கனமழைக்கு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் புயலுடன் கூடிய கனமழை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயை பொருத்த வரையில் 12 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது துபாயில் ஓராண்டு பெய்யக்கூடிய சராசரி மழை அளவு என்றும் கடந்த 75 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிலான கனமழை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமான சேவை முடங்கியுள்ளது. 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து மற்றும் வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபாயிலிருந்து இந்தியாவுக்கு வரும் 13 விமானங்களும் இந்தியாவிலிருந்து துபாய்க்குச் செல்லும் 15 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. தேவையின்றி மக்கள் யாரும் துபாய் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய பெருமழைக்கு ஐக்கியஅரபு அமீரகம் செயற்கை மழைக்காக மேக விதைப்பு காரணமாக இருக்கக்கூடும் என்ற சில தரப்புகள் கூறிவருகின்றன. இது செயற்கையாக தூண்டப்பட்ட மழை அல்ல என்றும் காலநிலை மாற்றத்தின் நீட்சியாக கனமழை பெய்துள்ளது என்றும் கூறுகின்றனர்.

தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பல்வேறு நிறுவனங்கள் வீட்டிலிருந்தே தங்கள் வேலையை செய்யுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. ஓமனை பொறுத்த அளவில் மழை வௌ்ளத்தில் சிக்கி பள்ளி வாகனம் அடித்துச் செல்லப்பட்டதில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதேபோல மழையில் சிக்கி தற்போது வரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அளவுக்கு பெரும் மழை வெள்ளத்தை நாங்கள் பார்த்ததில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இந்த மழைக்கு காரணம் செயற்கை முயற்சிகள்தான் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் இயல்பில் அதிக வெப்பம் நிறைந்த பகுதிகளாகும். இங்கு மழையை ஏற்படுத்த செயற்கை முறையில் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் எடுத்த முயற்சிகள் காரணமாக இந்த பெருமழை பெய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆண்டுக்கு சுமார் 8 கோடி பயணிகளை கையாளும் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 440 விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமான பயணிகள் பலர் சுமார் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக துபாய் விமான நிலையத்திலேயே சிக்கியிருக்கின்றனர். மறுபுறம் சென்னையிலிருந்து துபாய்க்கு செல்லும் விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. சென்னையிலிருந்து அபுதாபி, சார்ஜா, குவைத்துக்கு செல்லும் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.