தஞ்சை பெரிய கோயில் குறித்து பரவும் சர்ச்சைக்கு இந்து அறநிலையத்துறை விளக்கம்!

தஞ்சை பெரிய கோயில் அடித்தளத்தை அசைக்கும் வகையில் தரைத்தளங்களை இந்து அறநிலையத்தறை உடைப்பதாக பரவுவது வதந்தி என்றும், வீடியோ வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றது. இந்த கோயில் எப்படி கட்டப்பட்டது என்று இன்றும் வெளிநாட்டில் இருந்து வருவோர் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு சோழர்களின் கட்டடக்கலை சிறப்பம்சமாக விளங்கி இருக்கிறது தஞ்சை பெரிய கோயில் என்ற பெருவுடையார் கோயில். 212 அடி (64.8 மீட்டர்) உயரமுள்ள இந்த சிவன் கோவில் நாட்டின் மிகப்பெரிய சிவ லிங்கங்களில் ஒன்றாகும். இங்குள்ள நந்தி, இந்தியாவின் இரண்டாவது பெரிய நந்தி ஆகும். 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ள இந்த நந்தி ஒரே கல்லில் இருந்து செதுக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே தஞ்சை பெரிய கோயில் குறித்து வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதற்கு இந்து அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்து அறநிலையத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலின் அடித்தளத்தை அசைக்கும் வகையில் தரைத்தளங்களை உடைத்து இந்து சமய அறநிலையத் துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒரு காணொளி காட்சி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத்திருக்கோயில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையினரால் மட்டுமே மேற்கொள்ளப்படும். இந்து சமய அறநிலையத்துறையால் தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சன்னதியின் பின்புறத்தில் உள்ள தரைத்தளம் மேடு பள்ளங்களுடன் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடப்பதற்கு சிரமமாக உள்ளதால் தரைத்தளத்தில் பராமரிப்பு பணிகள் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இந்திய தொல்லியல் துறையின் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் மீது அவதூறு பரப்பும் வகையில் காணொளி காட்சி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் இந்து அறநிலையத்துறை கூறியுள்ளது.