ரஷ்யாவுக்குள் நுழைய போரிஸ் ஜான்சனுக்கு தடை!

ரஷ்யாவுக்குள் நுழைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது

உக்ரைன் போரில் இங்கிலாந்தின் “விரோதமான” நிலைப்பாட்டின் காரணமாக, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிற மூத்த அமைச்சர்கள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ், பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் மற்றும் 10 மூத்த அரசியல்வாதிகள், பெரும்பாலும் பிரிட்டன் அமைச்சரவை உறுப்பினர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளனர். உக்ரைனை போருக்கு பிறகு ரஷ்யா மீது பிரிட்டன் விதித்துள்ள தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீதும் இதேமாதிரியான தடையை ரஷ்யா விதித்தது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகள் மீது ரஷ்யாவும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. அந்த வகையில், ரஷ்யாவுக்குள் நுழைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சரண் அடையும் அனைவரின் உயிருக்கும் நாங்கள் உத்தரவாதம் தருகிறோம் என்று உக்ரைன் வீரர்களுக்கு ரஷ்யா உறுதி அளித்துள்ளது. மரியுபோல் நகரில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி விட்டோம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அந்நகரம் உக்ரைன் படையிடம் இருந்து அகற்றப்பட்டது என்றும் சில வீரர்களுக்கு சரண் அடைய மட்டுமே புறநகர் பகுதியில் உள்ளனர் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்யா கெடு விதித்துள்ளது. அந்நகரில் எஞ்சியுள்ள உக்ரைன் மற்றும் வெளிநாட்டு வீரர்கள், அசோவ் ஸ்டல் பகுதியில் இருக்கும் எக்கு ஆலையில் உள்ளனர். இது தொடர்பாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, மரியுபோல் நகரில் இன்றும் சண்டையிடும் உக்ரைன் வீரர்கள் சரண் அடைய கெடு விதிக்கப்படுகிறது. அவர்கள் இன்று காலை 6 மணி முதல் (மாஸ்கோ நேரம்) தங்களது ஆயுதங்களை போட்டு விட்டு உயிரை காப்பாற்றி கொள்ள சரண் அடைய வேண்டும். சரண் அடையும் அனைவரின் உயிருக்கும் நாங்கள் உத்தரவாதம் தருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

உலோக ஆலையில் உருவாகியுள்ள பேரழிவு நிலைமையை கணக்கில் எடுத்துக் கொண்டு முற்றிலும் மனிதாபிமான கொள்கைகளால் வழி நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு உக்ரைன் வீரர்கள், எந்தவொரு விரோதத்தையும் நிறுத்தி விட்டு ஆயுதங்களை கீழே போட அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது. ரஷியா நேரப்படி இன்று மதியம் 1 மணி வரை சரண் அடைய கெடு விதிக்கப்பட்டுள்ளது.

கருங்கடல் பகுதியில் ரஷ்யா போர்க்கப்பல் தாக்கி அழிக்கப்பட்டதையடுத்து உக்ரைன் தலைநகர் கிவ்வில் மீண்டும் ரஷ்ய படைகள் தங்களது தாக்குதலை கடுமையாக்கியுள்ளன. அங்கு குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. அதே போல் மற்ற நகரங்களிலும் தாக்குதல் தொடர்கிறது.