பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை 5 நாட்கள் மூடல்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை அரசு அந்நிய செலாவணிக்காக பெரும்பாலும் சுற்றுலாத்துறையையே நம்பியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் தங்கள் எல்லையை மூடியதால் உலகம் முழுவதும் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில் இலங்கை அரசின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனாவை பல்வேறு நாடுகள் திறமையாக கையாண்ட நிலையில், இலங்கை ஆளும் ராஜபக்ச குடும்பம் அதில் கோட்டை விட்டதாக இலங்கை பொது மக்கள் கூறியுள்ளனர். ராஜபக்ச குடும்பம் இலங்கை பொருளாதார நெருக்கடியை தடுக்க தவறியதை கூறி அவர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக பாதித்து வருகிறது. எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தீவு நாடு முழுவதும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை(18-04-2022) முதல் வரும் 22-ம் தேதி வரை 5 நாட்கள் கொழும்பு பங்குச்சந்தை மூடப்படுவதாக அந்நாட்டு பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொருளாதார நிலைமைகள் குறித்து தெளிவு மற்றும் புரிதலைப் பெற உதவும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.