ஹிஜாப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்ட பிரபல ஈரானிய நடிகை ஹெங்கமேஹ் காசியானி உட்பட 8 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரான் நாட்டில் பெண்கள் அணியும் ஹிஜாபிற்கு எதிராக பெரும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை ஹெங்கமேஹ் காசியானி (52) என்பவர், ஹிஜாபிற்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக ஷாப்பிங் மால் ஒன்றுக்கு சென்ற அவர், தான் அணிந்திருந்த ஹிஜாப் ஆடையை தலையில் இருந்து கழற்றினார். அதன் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த பதிவில், ‘எனக்கு எதுவும் நடக்கலாம். அநேகமாக எனது இந்த பதிவு கடைசியானதாக இருக்கலாம். இந்த நிமிடத்திலிருந்து, எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. எப்பொழுதும் போல, நான் எனது கடைசி மூச்சு வரை ஈரானிய மக்களுடன் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ஈரானிய நடிகை ஹெங்கமேஹ் காசியானியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கலவரத்தை தூண்டியதாகவும், அதற்கு ஆதரவு அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை தனது புகைப்படத்தை பதிவிட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை ஹெங்கமேஹ் காசியானி கைது செய்யப்பட்டது சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மற்றொரு ஈரானிய செய்தித்தாளில், சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகை ஹெங்கமேஹ் காசியானி, டெக்ரான் கால்பந்து அணியின் பெர்செபோலிஸ் எப்சி பயிற்சியாளர் யாஹ்யா கோல்மொஹம்மதி ஆகியோரும் அடங்குவர் என்று தெரிவித்துள்ளது.