சிவசேனா பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி!

ஏக்நாத் ஷிண்டே அணியை உண்மையான சிவசேனா என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் சிவசனேவின் பெயர் மற்றும் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருந்தார். இந்நிலையில்தான் அவருக்கு எதிராக அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக செயல்பட தொடங்கினர். மேலும் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில் பாஜகவுடன், ஏக்நாத் ஷிண்டே அணியினர் இணைந்து புதிதாக ஆட்சியை அமைத்தனர். தற்போது முதல்வராக ஏக்நாத் ஷிண்டே உள்ளார். இதில் உண்மையான சிவசேனா நாங்கள் தான் என உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. இதில் விசாரணை நடந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் உண்மையான சிவசனோ என்பது ஏக்நாத் ஷிண்டே அணி தான் என அங்கீகரித்தது. மேலும் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இது ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு பெரிய வெற்றியாகும். மாறாக உத்தவ் தாக்கரே தரப்புக்கும் கடும் அதிர்ச்சியை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.