நடிகை விஜயலட்சுமி வழக்கு: போலீசில் 2-வது முறையாக சீமான் ஆஜராகவில்லை!

நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்து ஏமாற்றியது, 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தது உள்ளிட்ட புகார்கள் தொடர்பான புகார் மீதான விசாரணைக்காக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போலீசில் 2-வது முறையாக இன்றும் ஆஜராகவில்லை.

நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது 2011-ல் திருமண மோசடி புகார் கூறியிருந்தார். பின்னர் அந்த வழக்கை அவர் திரும்பப் பெற்றார். இதன் பின்னர் சமூக வலைதளங்களில் சீமான் மீது இடைவிடாத புகார்களை தெரிவித்தார் நடிகை விஜயலட்சுமி. இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த நடிகை விஜயலட்சுமி போலீசில் சீமான் மீது மீண்டும் புகார் கொடுத்தார். அப்போது செய்தியாளர்களிடம் சீமான் மீது கட்டாயக் கருக்கலைப்பு, நகை பணம் பறிப்பு என ஏராளமான அடுக்கடுக்கான புகார்களை கூறினார். இந்தப் புகார்களை சீமான் திட்டவட்டமாக மறுத்து வந்தார். அத்துடன் மானங்கெட்ட ஒருத்தியுடன் சண்டை போடுவதா? என கேள்வி எழுப்பினார். லோக்சபா தேர்தல் பணிகளில் இருந்து தம்மை திசைதிருப்ப, தடுக்க இத்தகைய சதிவேலைகள் செய்யப்படுகின்றன. நடிகை விஜயலட்சுமியின் புகாரின் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்றார் சீமான்.

இதனிடையே விஜயலட்சுமி புகார் மீது சென்னை போலீசார் முதலில் விசாரணை நடத்தினர். விஜயலட்சுமியிடம் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்திய பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கட்டாய கருக்கலைப்பு புகார் தொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. விஜயலட்சுமியின் வாக்குமூலம், மருத்துவ பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் செப்டம்பர் 9-ந் தேதி சீமானை விசாரணைக்கு ஆஜராக சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். தமக்கு கட்சிப் பணிகள் இருப்பதால் செப்டம்பர் 12-ந் தேதி ஆஜராகிறேன் என சீமான் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதனையும் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு ஏன் விசாரணைக்கு வர பயப்படுறீங்க சீமான்? என கேள்வி கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று சென்னை போலீஸ் முன்பாக சீமான் விசாரணைக்கு ஆஜராகக் கூடும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் 2-வது முறையாக சீமான் இன்று போலீஸ் விசாரணையில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் குழு ஆஜராகி இருந்தனர்.

இந்நிலையில், சீமான் தரப்பில், வழக்கறிஞர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகினர். அப்போது சீமான் தரப்பில், இரண்டு கடிதங்கள் காவல் ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்டது. வளசரவாக்கம் பகுதியில், நாம் தமிழர் கட்சியின் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டதால், தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், காவல் ஆய்வாளரிடம் சீமானின் கடிதங்களை கொடுத்த பின்னர், சீமான் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “விஜயலட்சுமி என்கிற பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குற்ற எண் 1007\2011 அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் அனுப்பியிருந்தார். சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்படக்கூடிய 160-வது சட்டப்பிரிவின் கீழ் சம்மன் அனுப்பியிருந்தனர். சில காரணங்களால், சீமானால் இன்று ஆஜராக முடியவில்லை. அதற்கான காரணங்களை ஆய்வாளரிடம் கூறியுள்ளோம். அதற்குப் பதிலாக, வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் ஆஜரானோம். சீமான் தரப்பில் வழங்கப்பட்ட இரண்டு கடிதங்களை காவல்துறை ஆய்வாளரிடம் கொடுத்துள்ளோம்.

அதில் ஒரு கடிதத்தில், 2011-ல் கொடுக்கப்பட்ட புகார் இது. விஜயலட்சுமி என்ற நபர், அந்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டார். எனவே, நான் இந்த வழக்கை தொடர விரும்பவில்லை. வழக்கை வாபஸ் பெறுவதாக, விஜயலட்சுமி கைப்பட எழுதி கொடுத்த கடிதம் இதே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அந்த வழக்கு அத்துடன் முடித்துவைக்கப்பட்டது. ஆனால், விஜயலட்சுமி சம்பவம் நடந்ததாக கூறும் 2008-க்குப் பிறகு, கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, 2023-ல் மீண்டும் ஒரு புகாரை விஜயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்து, அந்த புகார் இந்த காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

2011-ல் முடித்துவைக்கப்பட்ட அந்த வழக்கின் தொடர்ச்சியாகத்தான் இந்த விசாரணை நடக்கிறதா?, அல்லது, தற்போது கொடுக்கப்பட்டுள்ள புகாரின் பேரில் புதிதாக வழக்கு ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அல்லது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிரிவுகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கை விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் இருந்து உத்தரவுகள் ஏதேனும் பெறப்பட்டுள்ளதா? உள்ளிட்ட விவரங்களை காவல்துறை ஆய்வாளர் அளிக்கும்பட்சத்தில், ஆஜாரகும்போது விசாரணைக்கு என்னுடைய முழு ஒத்துழைப்பை தருகிறேன் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். இரண்டு கடிதங்களையும் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர், இதுகுறித்து ஆலோசித்து, அடுத்த விசாரணைக்கான தேதி குறித்து எங்களுக்கு தெரிவிப்பதாக பதிலளித்துள்ளார்” என்று அவர் கூறினார்.