சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம்: சேகர்பாபு

45 ஆண்டுகளாக அச்சுறுத்தலை சந்திக்கிறேன்; இது போன்ற போராட்டங்கள் என் பணியை தடுத்துவிடாது. சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அமைச்சர் உதயநிதியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய அண்ணாமலை, சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறார். அதனை அருகில் அமர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்த்து ரசிக்கிறார். உலகம் முழுவதும் இதற்கு கண்டனம் எழுந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு இப்போது பல்டி அடித்திருக்கிறார்கள் என்று கூறினார். இதனையடுத்து சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி சாலையில் அமர்ந்து அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு , பாதயாத்திரை எடுபடாததால் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என மடைமாற்றுகிறார் அண்ணாமலை; அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ மிரட்டல்களை நான் சந்தித்து இருக்கிறேன் என்று கூறிய சேகர்பாபு, உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம் என்று கூறினார். சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம்; ஆர்ப்பாட்டம், போராட்டம் இவற்றின் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது என்று தெரிவித்தார். 12,000க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் 71,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது; பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.