நடிகர் கமலஹாசனின் பூர்வீகம் பரமக்குடி அல்ல: சாட்டை துரைமுருகன்

நடிகர் கமல்ஹாசனின் பூர்வீகம் தமிழ்நாட்டின் பரமக்குடி அல்ல; கர்நாடகாவின் ஹாசன் பகுதி என நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மாண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் என முழு அடைப்புப் போராட்டங்கள் தொடருகின்றன. வரும் அக்டோபர் 5-ந் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடும் போராட்டத்தை வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். கர்நாடகா போராட்டங்களுக்கு நடுவே நடிகர் சித்தார்த், சித்தா படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பை பெங்களூரில் நடத்தினார். இந்த செய்தியாளர் சந்திப்புக்குள் உள்ளே நுழைந்த கன்னட அமைப்பினர் நிகழ்ச்சியில் ரகளை செய்தனர். இதனால் நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியை ரத்து செய்ய நேரிட்டது. இந்த சம்பவத்துக்கு நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் மன்னிப்பும் கேட்டனர்; கண்டனமும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:-

நடிகர் சித்தார்த்தை கர்நாடகாவில் வெளியேற்றினார்கள். நடிகர் சித்தார்த்தை வெளியேற்றிய போது, அவரது நிகழ்ச்சியை தடை செய்தது போல, தமிழர்கள்- தமிழ்த் தேசியவாதிகள்- தமிழ் உணர்வாளர்கள் தமிழ்நாட்டில் கன்னட நடிகர்களை கன்னட இசையமைப்பாளர்களை கன்னட நடிகைகளை வெளியேற்றனும்னு நினைச்சோம்னு வை.. தமிழ்நாட்டில் ஒரு நடிகர் இருக்க முடியாது.

உலக நாயகன் என எல்லோரும் கொண்டாடினாலும் பரமக்குடிக்காரர் என சொல்லப்பட்டாலும் அவர் கர்நாடகாவைச் சார்ந்தவர்தான். கர்நாடகாவில் ஹாசன் அப்படிங்கிற ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் கமல’ஹாசன்’. திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ அப்படின்னு ஊர் பேரை அடைமொழியாக போடுவதைப் போல ஹாசன் என்பது கர்நாடகாவின் ஒரு ஊர். அந்த ஊர் பெயரைத்தான் கமலஹாசன், ஸ்ருதி ஹாசன், சாரு ஹாசன், அனு ஹாசன் என ஹாசன், ஹாசன் என ஊர் பெயரை போட்டுக் கொள்கின்றனர். அந்த கமலஹாசனை தமிழ்நாட்டில் உயர்ந்த நட்சத்திரமாக மாற்றி அழகு பார்ப்பது தமிழ்நாடு. அவங்களாவது ரொம்ப முன்னாடி வந்தவங்க. இப்ப சமீபத்தில் வந்த பிரகாஷ் ராஜ், கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர். அவரை நடிக்க வைத்து அழகு பார்க்கவில்லையா? ஏன் நம்ம கிஷோர்.. பொல்லாதவன், ஆடுகளம் என பல படங்களில் நடித்தவர்.. இன்று நடித்துக் கொண்டுதானே இருக்கிறார்.. இவ்வாறு சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார்.