சென்னையில் இருந்து குஜராத் கிளம்பிய பாரத் கவுரவ் ரயிலில் புட்பாய்சனால் 80 பேர் பாதிப்பு!

சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் பாலிதானாவுக்கு புறப்பட்டு சென்ற பார்த் கவுரவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவு சாப்பிட்ட 80 பயணிகள் புட்பாய்சனால் பாதிக்கப்பட்ட சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய ரயில்வேயில் ரயில் மற்றும் ரயில் பெட்டிகளை வாடகைக்கு எடுத்து பயணிக்கும் நடைமுறை உள்ளது. அந்த வகையில் தான் சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் பாலிதானாவுக்கு பாரத் கவுரவ் எக்ஸ்பிரஸ் எனும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் என்பது தனியார் நிறுவனம் மூலம் வாடகைக்கு எடுத்து இயக்கியது. ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். சென்னையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் நேற்று இரவு புனே நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தான் ரயிலில் பயணித்த 80 பயணிகளுக்கு திடீரென்று வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சோலாப்பூர்-புனே இடைய ரயில் பயணித்த நிலையில் பயணிகள் அவதிப்பட்டனர். குறிப்பாக ஒரு பெட்டியில் பயணித்த அனைவரும் ஏறக்குறைய இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உடன் பயணித்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது. டாக்டர், மருத்துவ ஊழியர்கள் உடனடியாக விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு புனேவில் கூடுதல் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் இணைந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்கள் சாப்பிட்ட உணவால் புட்பாய்சன் ஏற்பட்டு இருப்பதும், அதனால் அவர்கள் உடல்நல பிரச்சனையை சந்தித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் மத்திய ரயில்வேயின் சிபிஆர்ஓ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறுகையில், ‛‛ரயிலில் பயணிகளுக்கு தனியார் மூலம் உணவு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சாப்பிட்ட உணவை ரயில்வே ஊழியர்கள் வினியோகம் செய்யவில்லை. ஐஆர்சிடிசியும் வழங்கவில்லை. அனைத்து பயணிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையை தொடர்ந்து பயணிகள் இயல்பான நிலையில் உள்ளது. அவர்கள் இன்னும் மருத்துவமனையில் இருக்க வேண்டிய தேவை இல்லை. அவர்கள் இனி வழக்கம்போல் அந்த ரயிலில் பயணம் செய்ய உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.