புலம்பெயர்ந்தோர் பிரச்னையால் ரஷ்யாவுடனான எல்லை மூடல்: பின்லாந்து

புலம்பெயர்ந்தோர் பிரச்னையால் ரஷ்யாவுடனான எல்லையை முழுமையாக மூடப்போவதாக பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய தேசமான பின்லாந்து தனது அண்டை நாடான ரஷ்யாவுடன், 1,340 கி.மீ தூர எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்தநிலையில், ரஷ்யா – பின்லாந்து எல்லை வழியாக, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பின்லாந்துக்குள் புலம்பெயருவோரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவது, அந்நாட்டு அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் முதல், விசா மற்றும் முறையான ஆவணங்களின்றி ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின்லாந்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். நவம்பரில் மட்டும் 900க்கும் அதிகமானோர், ரஷ்யா வழியாக பின்லாந்து எல்லையை அடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதில் பெரும்பாலும், எரித்திரியா, எத்தியோப்பியா, ஈராக், பாகிஸ்தான், சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. பின்லாந்து எல்லையையொட்டிய ரஷ்ய பகுதியில் 400க்கும் அதிகமானோர் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இந்த பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக, ரஷியாவுடனான எல்லையை முழுமையாக மூடப்போவதாக பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று (நவ.28) செய்தியாளர்களிடம் பேசிய பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ கூறுகையில், “பின்லாந்தின் கிழக்கு எல்லையில் உள்ள அனைத்துச் சாவடிகளையும் மூட அரசு முடிவு செய்துள்ளது” என்று கூறினார். மேலும், பின்லாந்துக்குள் மக்கள் புலம்பெயர்வதை, ரஷ்யா திட்டமிட்டு அனுமதித்து வருவதாகவும் ரஷ்யா மீது அவர் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பின்லாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாட்டின் பாதுகாப்பை குழிதோண்டிப் புதைக்கும் எந்த முயற்சியையும் அனுமதிக்க முடியாது. இந்த நிலைமையை உருவாக்கிய ரஷ்யாவால், இதை நிறுத்தவும் முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

குறைந்தது, 2 வாரத்துக்கு, ரஷ்ய எல்லை முழுமையாக மூடப்படும் என்றும், அதன்பின், ஒருசில எல்லைச் சாவடிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பின்லாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.