கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை: சீமான்

மைக் சின்னத்தை தூய தமிழில் ‘ஒலிவாங்கி’ என்று சொல்லும் போது மக்களுக்கு புரியாத நிலை. மைக் என்று சொல்லவேண்டி இருக்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி “மைக்” சின்னத்தில் போட்டியிடுகிறது. கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டதால் சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த முறை “மைக்” சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், மைக் சின்னத்தை தமிழில் ‘ஒலிவாங்கி’ என்று சொல்லும் போது மக்களுக்கு புரியாத நிலை. மைக் என்று சொல்லவேண்டி இருக்கிறது என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் கூறியதாவது:-

இப்போது நாம் 90 சதவீதத்திற்கும் மேலாக ஆங்கிலம் கலந்து கலந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். என் கையில் இருக்கின்ற இந்த சின்னத்தை கூட ‘ஒலிவாங்கி’ என்று தூய தமிழில் சொன்னால், என் மக்களுக்கு புரியாத ஒரு நிலை. இதை மைக் என்று சொல்லக்கூடிய ஒரு நிலை இருக்கிறது. இப்படி தான் மொழி சிதைந்து அழிந்து நாம் அழிந்தோம். தெற்காசியா முழுமைக்கும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் தான். பிறகு மற்ற இனங்கள் எல்லாம் வந்து குடியேறியது. குடியேறியவர்கள் என்று ஹார்டுவெல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜோசப்பும் ரிச்சார்ட் மார்டினும் தங்கள் ஆய்வு கட்டுரையில் நிறுவுவார்கள். இந்திய அரசியல் சாசனத்தை வகுத்து கொடுத்த அம்பேத்கர் இந்த துணைக்கட்டம் முழுமைக்கும் பரவி விரிந்தவர்கள் தமிழர்கள் தான். இந்த நாட்டை என் நாடு என்று சொந்தம் கொண்டாட ஒரே ஒரு இனத்திற்கு தான் உரிமை உண்டு என்றும், அந்த இனம் தமிழ் இனம் தான் என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.