ஜாதி மதம் பார்த்து ஓட்டுப் போடாதீங்க: சீமான்!

லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஜாதி, மதம் பார்த்து ஓட்டுப் போட வேண்டாம்.. அது எங்களுக்கு தீட்டு.. அதற்கு பேசாமல் எப்போதும் போல நாங்கள் தோற்பதுதான் பெருமை என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.

தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணனை ஆதரித்து சீமான் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். புளியங்குடி தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது:-

8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். தலைவர்களை, கட்சிகளை நம்புகிறவர்கள் மற்றவர்கள்.. நாங்கள் தலைமுறைகளை நம்பவில்லை.. அடுத்த தலைமுறை தம்பி, தங்கைகளை நம்புகிறவர்கள். 13 ஆண்டுகளாக நாங்கள் கதறுவது, பாடுபடுவது என்பது எங்களுக்குப் பின்னால் வரும் தம்பி- தங்கைகளுக்கு இத்தகைய நிலைமை வரக் கூடாது என்பதற்குதான். நாங்கள் வெயிலில் நிற்பது அடுத்த தலைமுறை நிழலில் நிற்க வேண்டும் என்பதற்காக. எங்கள் முன்னவர்கள் அதற்காகவே போராடினார்கள்.

ஜாதி, மதம் பார்த்து எங்கள் வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட்டுவிடாதீர்கள். அது எங்களுக்கு தீட்டு. அப்படி நீங்கள் ஓட்டுப் போடுவதற்கு பேசாமல் நாங்கள் எப்போதும் போல தோற்றுப் போவதுதான் பெருமை. எங்களின் பிள்ளைகள் மண்ணுக்கும் மக்களுக்கும் உழைக்கக் கூடிய பிரபாகரனின் ரத்த துளிகள். இதை நம்பினால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள். இல்லை எனில் எப்போதும் போல எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் அப்படி எல்லாம் ஜாதி, மதம் பார்த்து வாக்கு பெற்று வெல்வதை விட தோற்பதே பெருமைதான். என்றாவது ஒருநாள் வெல்லப் போகும் கோட்பாட்டுக்காக பாடுபடுகிறவர்கள் நாங்கள். எங்கள் சின்னமான ஒலிவாங்கி மூலமாகத்தான் ஆகச் சிறந்த புரட்சியாளர்கள் தங்களது முழக்கத்தை முன்வைத்தார்கள். என் சின்னமான மைக் இல்லாமல் எவனுமே ஓட்டுக் கேட்கவே முடியாது. நாங்கள் சமுத்திரம். எங்களை ஜாதி குட்டைக்குள் இழுத்துவிடாதீர்கள். மதம், ஜாதி கடந்து மக்களை நேசிக்கிற பிள்ளைகள் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள். இவ்வாறு சீமான் பிரசாரம் செய்தார்.