நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான் உதாரணமாக இருப்பேன்: தமிழிசை!

நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான் ஒரு உதாரணமாக இருப்பேன் என்று தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். நடைபாதைகளில் பெண்களால் நடத்தப்படும் கடைகளில் சாப்பிட்டும், வீடு வீடாக சென்றும் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். பிரபலமான வேட்பாளராக திகழ்வதால் வாக்கு சேகரிக்கும் இடங்களில் அப்பகுதி மக்கள் அவருக்கு மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இன்று காலை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் திறந்த வெளி ஜீப்பில் சென்று தாமரை பூவை காட்டி மக்களிடம் ஆதரவு திரட்டினார். சாலைகளில் சென்றவர்கள் அவரிடம் தாமரைக்கு வாக்களிப்பதாக கூறினர். எல்டாம்ஸ் சாலை சுப்பிரமணியன் கோயில் முன்பு தொடங்கிய பிரச்சாரம் திருவள்ளுவர் சாலை, ஆழ்வார்ப்பேட்டை தெரு, பீமண்ண நகர்-பாவா சாலை, விசாலாட்சி தோட்டம், செயின்ட் மேரீஸ் சாலை, மந்தவெளி, 5வது டிரஸ்ட் குறுக்கு வீதி உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் மக்களுக்கு நல்லது செய்வேன், அழைக்கும் போது ஓடிவந்து நிற்பேன் என்கிற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. மக்கள் பணியில் சாதிக்க முடியும் என்கிற எண்ணத்தை மக்கள் எனக்கு அளித்துள்ளனர். எனவே தொகுதி மக்கள் நம்பிக்கையோடு எனக்கு வாக்களிப்பார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான் ஒரு உதாரணமாக இருப்பேன். எப்போதும் தெருவில் மக்களோடு மக்களாகத்தான் இருப்பேன். தமிழகத்தில் சத்தமே இல்லாமல் ஒரு தேசியக் கட்சி வளர்ந்து வருகிறது. 1967ம் ஆண்டு தமிழகத்தில் மாநிலக் கட்சிக்கு எப்படி ஒரு புரட்சி ஏற்பட்டதோ, அதுபோன்று தற்போது அமைதியான புரட்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.