அம்பேத்கர் சிலை மீது பாமக டி-ஷர்ட் போட்ட 4 பேர் குண்டு வீசினர்: வன்னி அரசு!

கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாமக டி-ஷர்ட் அணிந்த இளைஞர்கள் குண்டு வீசியதாக விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை மீது, மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர். மர்ம நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலைக்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அம்பலவாணன் பேட்டை பொதுமக்கள் மற்றும் விசிக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அம்பேத்கர் சிலை மீது குண்டு வீச முயன்றவர்கள் பாமக டி-ஷர்ட் அணிந்திருந்ததாகவும், புகாரின் பேரில் 4 பாமகவினரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸையும் விமர்சித்துள்ளார் வன்னியரசு.

இச்சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்துள்ள அம்பலவாணன் பேட்டையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை மீது நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சில சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். குறி தவறியதால் சிலைக்கு அருகே விழுந்துள்ளது. அம்பலவாணன் பேட்டை பொது மக்களும் விடுதலைச்சிறுத்தைகளும் பதறி அடித்துக்கொண்டு பார்த்தபோது, பாமக டி சர்ட் அணிந்திருந்த இளைஞர்கள் டூ வீலரில் கத்திக்கொண்டு போயுள்ளனர். காவல்துறையில் முறையாக புகார் கொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த போலீசார் 4 பாமகவினரை கைது செய்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை சரியான கோணத்தில் விசாரித்து சமூகவிரோதிகளை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்.

மாற்றம் முன்னேற்றம் என அரசியல் செய்யப்போவதாக பீற்றிக்கொள்ளும் அன்புமணி ராமதாஸ் அவர்களே.. இது தான் உங்களது மாற்றம் முன்னேற்றமா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வன்னி அரசு.