தான்சானியாவில் ஏரியில் விமானம் விழுந்த விபத்தில் 19 போ் பலி!

தான்சானியாவில் சிறிய ரக விமானம், ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 போ் உயிரிழந்தனா்.

தான்சானியாவில் ‘பிரிசிஸன் ஏா்’ நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று ‘தா் எஸ் சலாம்’ நகரிலிருந்து புகோபா விமான நிலையத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் சுமாா் 43 பயணிகள் இருந்தனா். அந்த விமானம் தரையிலிருந்து 100 மீ. உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள விக்டோரியா ஏரியில் விழுந்தது. சிறிது நேரத்தில் விமானத்தின் பெரும் பகுதி தண்ணீரில் மூழ்கியது.

முதலில் 26 பேர் மீட்கப்பட்டனர்; 3 பேர் பலியாகினர் என செய்திகள் வெளியாகின. தற்போது இச்சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துவிட்டனர். எஞ்சியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தான்சானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தான்சானியாவின் பிரதமர் காசிம் கூறுகையில், விமானம் 100 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது நிலவிய மோசமான வானிலையால் பயணிகளுடன் விக்டோரியா எரிக்குள் விமானம் விழுந்தது. உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனாலும் 19 பேர் சடலமாகவே மீட்கப்பட்டனர் என்றார்.