சேலத்தில் வாக்களிக்கச் சென்ற 2 வாக்காளர்கள் உயிரிழப்பு: சத்யபிரத சாஹு விளக்கம்!

“சேலத்தில் வாக்களிக்கச் சென்ற இரண்டு வாக்காளர்கள் மயங்கி விழுந்து உயரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பந்தல், வாக்காளர்கள் அமர்ந்து செல்வதற்கான இருக்கைக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 26.58% வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் குறைந்தபட்சமாக 20.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் ஒரு வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை என்று புகார் அளித்தனர். அது உடனடியாக சரிசெய்யப்பட்டது” என்றார்.

அப்போது சேலத்தில் வாக்களிக்க வந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சேலம் சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம். வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பந்தல், வாக்காளர்கள் அமர்ந்து செல்வதற்கான இருக்கைக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, வாக்காளர்கள் தங்களது உடல்நலனை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேநேரம், வாக்களிப்பதற்கு இன்னும் நேரம் இருக்கிறது” என்றார்.

வாக்குச்சாவடிகளில் மருத்துவ வசதி குறித்த கேள்விக்கு, “அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மருத்துவ வசதிகள் மேற்கொள்ளவில்லை. ஆனால், மருத்துவத் துறைக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

பரந்தூர் உள்ளிட்ட பல இடங்களில் தேர்தலை புறக்கணித்துள்ளதாக மக்கள் அறிவித்துள்ளனர். அதுபோன்ற இடங்களில் வாக்குப்பதிவு மேற்கொள்ள ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, “அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறோம். அதுபோன்ற இடங்களில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை வாக்களிக்க செய்யுமாறுக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “விளவங்கோடு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, காலை 11 மணி நிலவரப்படி 17.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறாக இருந்து, மேலும், காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியிருந்தால் அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். அதேநேரம், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தவர்களில் கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.